தமிழக ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகள் அனுப்பும் போது எடை குறைப்பு செய்யப்படுவதாக பெரும் புகார் எழுந்துள்ளது. இதனால் ஆண்டுக்கு சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2.25 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது. மாதத்துக்கு 3.63 லட்சம் டன் அரிசி தேவைப்படும் நிலையில், இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து பெறப்பட்ட அரிசி தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளுக்கு வருகிறது. அங்கிருந்து கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.
ஒரு மூட்டை 50 கிலோ அரிசியுடன் சாக்கு பை எடையுடன் சேர்த்து 50 கிலோ 650 கிராம் இருக்க வேண்டும். ஆனால், உண்மையில் ஒவ்வொரு மூட்டையிலும் 1 முதல் 3 கிலோ வரை குறைவாகவே அனுப்பப்படுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: டெண்டர் இல்லாமல் ரூ.1.35கோடிக்கு அட்வான்ஸ்? வாய்மொழி உத்தரவுக்கு வாரி வழங்கிய திமுக! முறைகேடு அம்பலம்?
மாதம் சராசரியாக 3 லட்சம் டன் அரிசி வழங்கப்படும் நிலையில், ஒரு மூட்டைக்கு சராசரியாக 1 கிலோ குறைந்தால் 60 லட்சம் மூட்டைகளில் 60 லட்சம் கிலோ அரிசி குறைகிறது. வெளிச் சந்தையில் ஒரு கிலோ அரிசியின் விலை 40 ரூபாய் எனக் கொண்டால், மாதம் 24 கோடி ரூபாய் மதிப்பிலான அரிசி கள்ளச் சந்தைக்கு திருப்பி விடப்படுவதாக கணக்கிடப்படுகிறது. இது ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் அளவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் கூறுகையில், “அரிசி இறக்கும் போது எடை போட்டு காட்ட வேண்டிய விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. 2 முதல் 3 கிலோ குறைவாக வரும் மூட்டைகளின் இழப்பை சரிகட்ட கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்கும் போது சிரமம் ஏற்படுகிறது. எடை குறைப்பு மூலம் கிடைக்கும் அரிசி கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக சந்தேகம் எழுகிறது. இதில் பல தரப்பினருக்கும் தொடர்பு இருக்கலாம்” என தெரிவித்தனர்.
இந்த ஊழல் முழுமையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். எடை குறைப்பைத் தடுக்க எடை பரிசோதனை அமைப்புகளை கடுமையாக்கவும், லாரிகளில் GPS கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் எடை இயந்திரங்களை அறிமுகப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
இந்த விவகாரம் தமிழகத்தில் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழை மக்களின் உணவு உரிமையை பாதிக்கும் இந்த ஊழலை தமிழக அரசு உடனடியாக களைந்து, ரேஷன் அமைப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதையும் படிங்க: மருந்து கட்டுப்பாட்டு துறையில் கரைபுரண்டோடும் ஊழல்! கண்காணித்து நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?!