தமிழ்நாட்டில் திருநங்கை சமூகத்தினர் நீண்ட காலமாக பல்வேறு சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வலியுறுத்தி அவர்கள் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில், கண்ணகி நகர் பகுதியில் வீடுகள் ஆக்கிரமிப்பு, மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும், மகளிருக்கு வழங்கப்படும் இலவச பேருந்து சேவையைப் போல தங்களுக்கும் கட்டணமில்லா பயண வசதி வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருநங்கைகள் தங்கள் குரலை உயர்த்தியுள்ளனர்.
இவை தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏழைப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் முக்கிய திட்டமாகும். இந்தத் திட்டத்தில் சில திருநங்கைகளுக்கு மட்டுமே உதவி கிடைப்பதாகவும், அனைத்து திருநங்கைகளுக்கும் இதை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

திருநங்கைகள் பலர் குடும்பத் தலைவிகளாக இருந்தாலும், அடையாள ஆவணங்கள், சமூக அங்கீகாரம் மற்றும் நிர்வாகத் தடைகள் காரணமாக பலருக்கு இந்த உரிமை முழுமையாகக் கிடைப்பதில்லை என்பது அவர்களின் முக்கிய புகார். “எங்களைப் பெண்களுடன் சேர்த்து பார்க்க வேண்டும். தனி அடையாளத்துடன் பிரிக்காமல் அனைவருக்கும் உரிமை வழங்க வேண்டும்” என அவர்கள் கோருகின்றனர். சுமார் 4,000க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சென்னையில் மட்டும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், பலரின் விண்ணப்பங்கள் இன்னும் ஒப்புதல் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல், வீட்டு உரிமை பிரச்சினையும் திருநங்கை சமூகத்தை பெரிதும் பாதிக்கிறது.
சென்னை கண்ணகி நகர் பகுதியில் அரசு ஒதுக்கிய வீடுகளில் பல ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதாகவும், அங்கு குற்றங்கள், போதைப்பொருள் தொல்லை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகமாக இருப்பதாகவும் திருநங்கைகள் குற்றம் சாட்டுகின்றனர். கட்டிடம் இல்லாத பேருந்து பயணம் பெண்களுக்கு வழங்கப்படுவது போல தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் திருநங்கைகள் வலியுறுத்தி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: டைம் குடுங்க ப்ளீஸ்..! விரைவில் மகளிர் உரிமைத்தொகை... முதல்வர் விஜய் உறுதி..!