திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு மொத்தம் 150 கிலோ எடையிலான இரண்டு பிரமாண்ட கொழுக்கட்டைகள் படையலாக வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்சியில் குவிந்தனர்.
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மலைக்கோட்டை கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, இரண்டு விநாயகர் சன்னதிகளுக்கும் தலா 75 கிலோ எடையில் பிரமாண்ட கொழுக்கட்டைகள் தயாரிக்கப்பட்டன. பச்சரிசி, உருண்டை வெல்லம், எள், ஏலக்காய், சாதிக்காய், நெய் மற்றும் தேங்காய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி இந்த கொழுக்கட்டைகள் தயாரிக்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திருச்சிதாங்க பெஸ்ட்! தூய்மையான காற்று நகரங்கள் ரேங்கிங்! சென்னையை பின்னுக்கு தள்ளி அசத்தல்! தமிழகத்துக்கு பெருமை!

தயார் செய்யப்பட்ட கொழுக்கட்டைகள் மேளதாளங்கள் முழங்க தொட்டில்களில் வைத்து சன்னதிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அவை விநாயகப் பெருமானுக்கு நைவேத்தியமாக படைக்கப்பட்டன. பிரமாண்ட கொழுக்கட்டைகள் படைக்கப்பட்ட காட்சியை காண கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் ஆர்வம் காட்டினர்.
சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின்னர் கொழுக்கட்டை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை பெறுவதற்காகவும், உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகரை தரிசனம் செய்வதற்காகவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மேலும், மலைக்கோட்டை கோவிலில் உள்ள கம்பத்தடி விநாயகர் மற்றும் கஜமுக விநாயகருக்கும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தரிசனம் நடைபெற்றது.
திருச்சி மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. இதனால் திருச்சி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
இதையும் படிங்க: விடிந்ததுமே இப்படியா?... கே.என்.நேரு வீட்டிற்கு ஓடோடி சென்ற அன்பில் மகேஷ்... திருச்சியில் குவியும் திமுகவினர்...!