மதுரையில் நாளை (ஆகஸ்ட் 21) தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு பாரபத்தியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 20 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டிற்காக 506 ஏக்கர் பரப்பளவில் மிகுந்த முனைப்புடன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைப்பு உள்ளிட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 50 ஆயிரம் வாகனங்களுக்கான பார்க்கிங், 5 லட்சம் குடிநீர் பாட்டில்கள், கழிப்பறைகள், மருத்துவ வசதிகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் தயாராகியுள்ளன. குறிப்பாக, அவசர மருத்துவ சேவைக்காக 400 மருத்துவக் குழுவினர் மற்றும் டிரோன் மூலம் மருந்து விநியோக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தவெகவிற்கு வந்த சிக்கல்.. கடைசி நேரத்தில் காலைவாரிய ஒப்பந்ததாரர்கள்.. ஓடோடி வந்த சேட்டன்கள்..!!
மாநாட்டு மேடையில் அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் விஜய்யின் புகைப்படங்களுடன் கூடிய கட்-அவுட்கள் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளன. மக்கள் விரும்பும் முதல்வர் என ஸ்டிக்கர்களுடன் குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட உள்ளன. மாநாடு மதியம் 3:15 மணிக்கு தொடங்கி, இரவு 7:00 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் உத்திகள் குறித்து விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டில் வீடியோ பதிவு செய்வது, செல்ஃபி எடுப்பது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள் மற்றும் உடல்நலம் குன்றியோர் மாநாட்டிற்கு வருவதை தவிர்க்குமாறு கட்சித் தலைவர் விஜய் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்த மாநாட்டை முன்னிட்டு, மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, மாநாட்டினால் ஏற்படவுள்ள போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மதுரையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்று கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. மாநாடு நடைபெறும் பகுதிகளைச் சுற்றியுள்ள சில தனியார் கல்வி நிறுவனங்கள் மட்டுமே விடுமுறை அறிவித்துள்ளன. மற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு மதுரையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க.வின் அரசியல் நோக்கங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விஜய் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாநாடு பகுதியில் போலீஸ் பாதுகாப்பும், போக்குவரத்து ஒழுங்கமைப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணங்களைத் திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 2வது மாநாட்டிற்கு ரெடியாகும் தவெக.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கட்சி தலைமை..!!