தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் செல்போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் தங்கள் செல்போன்களை கோயிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில முக்கியமான கட்டுப்பாடுகளுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள 52 முக்கிய திருக்கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல முழுமையான தடை அமல்படுத்தப்பட்டது. இந்தத் தடை, கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனைத் தரிசனம் செய்யவும் நோக்கமாகக் கொண்டு விதிக்கப்பட்டது.
ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், ராமேஸ்வரம் போன்ற சில கோயில்களில் இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன. நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், கோயிலுக்குள் சிலைகளைப் புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு செய்தல், செல்ஃபி எடுத்தல் மற்றும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவேற்றுதல் போன்ற செயல்கள் அதிகரித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.தடை அமலுக்கு வந்த பிறகு, கோயில் நுழைவு வாயில்களில் செல்போன் பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட்டன. பக்தர்கள் தங்கள் போன்களை ஒப்படைத்து டோக்கன் பெற்றுக்கொண்டு உள்ளே செல்ல வேண்டியிருந்தது.

ஒரு போனுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது பணியாளர் மற்றும் பராமரிப்புச் செலவுக்காக மட்டும் என விளக்கமளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஏற்பாடு பல சிரமங்களை உருவாக்கியது. பெரும்பாலான கோயில்களில் வரிசை நீண்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது நிலைமை மேலும் மோசமடைந்தது. அவசரத் தேவைகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியாததால் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வருபவர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர். இதனால் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்தது.இந்தப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அறநிலையத்துறை புதிய முடிவை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!
இனி பக்தர்கள் தங்கள் செல்போன்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்லலாம். ஆனால் கோயிலுக்குள் இருக்கும் வரை போன்கள் கண்டிப்பாக சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதாவது அழைப்புகள், செய்திகள் அனுப்புதல் அல்லது வேறு எந்த வகையிலும் போனைப் பயன்படுத்தக் கூடாது. சிலைகள், பூஜைகள் மற்றும் கோயில் வளாகம் தொடர்பான புகைப்படம், வீடியோ, செல்ஃபி அல்லது சமூக வலைதளப் பதிவுகள் எடுக்கும் தடை தொடர்ந்து நீடிக்கிறது. இந்த விதிகளை மீறி ரகசியமாகப் படம் எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இந்தத் தளர்வு பக்தர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இதையும் படிங்க: “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!