தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டசபைத் தொகுதியில் திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் குறித்து சுவாரசியமான கருத்துகளைத் தெரிவித்தார்.
சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய அமைச்சர், “விஜய் பிரசாரக் கூட்டங்களுக்கு ரசிகர்கள் செல்லத்தான் செய்வார்கள். நாங்களும் விஜய் ரசிகர்கள்தான். ஆனால் ஓட்டு போடும் போது அந்தந்த கட்சிக்கு என ரசிகர்கள் ஓட்டு போடுவார்கள். திருச்செந்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் டிபாசிட் பறிபோய்விடும்” என்றார்.
மேலும், “பா.ஜ.வால் அனுப்பப்பட்ட ஒரு வேட்பாளர் மாதிரிதான் விஜய். அவர் சிறுபான்மை இன மக்கள் ஓட்டுகளைப் பிரிப்பதற்காக திட்டமிட்டு வந்துள்ளார். ஆனால் சிறுபான்மை மக்கள் ஏமாற மாட்டார்கள். அவர்கள் நன்கு படித்தவர்கள் என்பதால் ஒட்டுமொத்தமாக மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஓட்டு போடுவார்கள்” என அவர் கூறினார்.
இதையும் படிங்க: ED ரேடாரில் சிக்கும் அடுத்த அமைச்சர்?! அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சிக்கல்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் அமைச்சர் விமர்சனம் செய்தார். “முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் அவருக்கு விழாது. காலில் விழுந்து வந்த அவர், காலை வாரி விட்டதால் முக்குலத்தோர் ஓட்டு போட மாட்டார்கள்” என்றார்.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் செய்ய முடியாமல் இருப்பது குறித்தும் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “பா.ஜ.தான் மத்தியில் ஆட்சியில் உள்ளது. அவர்களது கட்டுப்பாட்டில்தான் சினிமா உள்ளது. தன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கும் விஜய், அதைப் பற்றி பேசாமல் திமுகவை அட்டாக் செய்கிறார்” எனக் குற்றம்சாட்டினார்.
இந்தப் பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் பேச்சாகியுள்ளது. த.வெ.க.வின் உயர்வு மற்றும் விஜய்யின் ரசிகர் பலத்தை ஒப்புக்கொண்டாலும், ஓட்டு அரசியலில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என திமுக தரப்பு நம்பிக்கை தெரிவித்து வருகிறது. ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் தலைவர்களின் இத்தகைய பேச்சுகள் கட்சிகளுக்கு இடையேயான வார்த்தைப் போரை தீவிரப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: நேருக்கு நேர் சந்தித்து கொள்ளாத ராகுல்காந்தி - மு.க.ஸ்டாலின்!! எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய விஜய்!!