தமிழகத்தில் அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 கோவில்களின் பட்டியலில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் கோவிலின் வருவாய் ரூ.233.50 கோடியாகப் பதிவாகியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் வருமான விவரங்களின்படி, முதல் 10 கோவில்களின் மொத்த ஆண்டு வருவாய் ரூ.941.99 கோடியாக உள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, பழனி முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்கள் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகையால் பரபரப்பாகக் காணப்படுகின்றன.
வருமானப் பட்டியலில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ரூ.233.50 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ரூ.139.06 கோடியுடன் இரண்டாவது இடத்தையும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ரூ.131.38 கோடியுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இதையும் படிங்க: செஃப் தாமு மறைவு: சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பு! முதல்வர் விஜய் இரங்கல்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் ரூ.111.09 கோடி வருவாயுடன் நான்காவது இடத்தில் உள்ளது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ரூ.74.98 கோடியுடன் ஐந்தாவது இடத்திலும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ரூ.73.72 கோடியுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ரூ.64.33 கோடியுடன் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் ரூ.50.57 கோடியுடன் எட்டாவது இடத்திலும், மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ரூ.34.20 கோடியுடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் ரூ.29.16 கோடி வருவாயுடன் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த 10 கோவில்களின் மொத்த ஆண்டு வருவாய் ரூ.941.99 கோடி எனப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில்களின் வருவாய், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, அன்னதானத் திட்டங்கள் மற்றும் தூய்மைப் பணிகள் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படுவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவில்களின் வருவாய் விவரங்கள் வெளியான நிலையில், தமிழகத்தில் அதிக வருமானம் ஈட்டும் கோவில்களில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் முதலிடத்தில் இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சகதிக்குள் புதைந்த அரசு பேருந்து! வாட்ஸ்அப் மூலம் உதவி கேட்ட மாணவிகள்! மீட்புப் பணியில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!