தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கும் விவகாரத்தில் 100கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக திங்களன்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைப்பதற்காக காவல்துறை வாகனத்தில் அழைத்து வரப்பட்ட போது அங்கு காத்திருந்த ஆதரவாளர் ஒருவர் கரூரில் அன்னைக்கே அவனை (முதலமைச்சர் விஜய்) போட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா தலைவரே என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த காட்சிகள் ஊடகங்களில் வைரலாக பரவியது.
முதற்கட்ட விசாரணையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நபர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவரும், வேலூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரும், வேலூர் மாநகராட்சி 12வது வார்டு மாமன்ற உறுப்பினருமான டிடா சரவணன் என தெரிய வந்தது. இது தொடர்பாக புழலை சேர்ந்த தவெக வழக்கறிஞர் அணி பெண் நிர்வாகி ஷாலினியிடம் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி மிரட்டல் விடுத்ததாக புகாரை பெற்று 192, 296(b), 353(1), 351(3) என 4 பிரிவுகளில் புழல் போலீசார் வழக்கு பதிந்தனர்.
புதன்கிழமை விழுப்புரத்தில் திமுக கவுன்சிலர் டிடா சரவணனை கைது செய்த தனிப்படை போலீசார் புழல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த அம்பத்தூர் குற்றவியல் நடுவர் ஜெய்சங்கர் முன் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேரில் ஆஜராகி வாதாடினார்.
இதையும் படிங்க: தவெகவுக்கு மிரட்டல்..! திமுக கவுன்சிலர் சரவணன் மீது வழக்குப்பதிவு.! தேடுதல் வேட்டை..!!
தவெக பெண் நிர்வாகி புகார் குறித்தும், கைது நடவடிக்கைகள் தொடர்பான வாதங்களுக்கு பிறகு கைதின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கவில்லை எனவும், வழக்குப்பதிய உரிய முகாந்திரம் இல்லை என கூறி காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, திமுக கவுன்சிலரை சிறையில் அடைக்க வேண்டும் என்ற காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்து டிடா சரவணனை சொந்த ஜாமீனில் விடுவித்தார்.
தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் சரவணன், 27ஆம் தேதி வழக்கு பதிந்து, 30ஆம் தேதி வரை ஆஜராக அவகாசம் என நோட்டீஸ் இருந்தும் 28ஆம் தேதியே கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என காவத்துறை தரப்பிற்கு கேள்வி எழுப்பியதாகவும், முதல் தகவல் அறிக்கையில் முரண்பட்ட கருத்துக்கள் இருப்பதாகவும், வீடியோ வைரலாகி முதலமைச்சரின் இமேஜ் பாதிக்கப்பட்டத்தால் திமுக கவுன்சிலர் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்ததாக குற்றம் சாட்டினார்.
செஞ்சியில் காணாமல் போன குழந்தையை 15நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாத காவல்துறை, பொய் வழக்கு புனைவதில் கவனம் செலுத்துகிறது எனவும், பட்டப்பகலில் நடைபெறும் மரணங்களை கண்டு கொள்ளாமல் காவல்துறை நேரத்தை விரயம் செய்வதாக சாடினார்.
கரூர் சம்பவம் குறித்து யாரும் பொது வெளியில் பேச கூடாது என மிரட்டும் தொனியில் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளதாக குற்றம் சாட்டினார். அவதூறு வழக்குகளை விசாரிக்கும் வேலை காவல்துறைக்கு கிடையாது எனவும், அவதூறு என்றால் சம்மந்தப்பட்ட முதலமைச்சர், அமைச்சர் புகாரளிக்கலாம் என்றார்.
அண்மையில் புழல் சிறை மற்றும் புழல் காவல் நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்த போது இருந்த காவல் ஆய்வாளர் வசந்த்ராஜா பொறுப்பு வகிக்கும் காவல் நிலையத்தில் தான் தவெக பெண் நிர்வாகியிடம் புகார் பெற்று திமுக கவுன்சிலர் மீது வழக்கு பதிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசு மருத்துவரை அவமதித்த தவெக எம்.எல்.ஏ.... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜி சரவணன்...!