மாமல்லபுரத்தில் தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுகவை விமர்சித்தால் அதிமுகவுக்கு ஏன் வலிக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், மதுரையிலும் சென்னையிலும் திமுக - அதிமுக இடையே 'செட்டிங்' அரசியல் நடப்பதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்து வருவதை ஜீரணிக்க முடியாமல் இரு கட்சிகளும் கைகோர்த்துள்ளதாகக் குறிப்பிட்டார். "மக்களின் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல், விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் விமர்சிப்பதிலேயே அதிமுக குறியாக இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திமுகவைத் 'தீய சக்தி' என்று விமர்சித்ததற்கு, திமுகவினரை விட அதிமுகவினர் வரிந்துகட்டிக்கொண்டு பதில் அளிப்பது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய சி.டி.ஆர். நிர்மல் குமார், "எங்கள் தலைவர் விஜய் திமுகவின் செயல்பாடுகளைத் தான் விமர்சித்தார். ஆனால், அதற்குத் திமுக அமைச்சர்கள் பதில் சொல்வதற்கு முன்பாக அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் முந்திக்கொண்டு பதில் சொல்வது வேதனையாக இருக்கிறது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் 'தவெக' கூட்டணி கனவு கலைந்ததா? ரங்கசாமியை சந்தித்த பாஜக தேசியத் தலைவர்!
மதுரையில் அமைச்சர் மூர்த்திக்கும், சென்னையில் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் சாதகமாக அதிமுகவினர் ஒருவிதமான 'அண்டர்ஸ்டாண்டிங்' அரசியலைச் செய்து வருகின்றனர். ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளாமல், திரைமறைவில் ரகசியக் கூட்டாளிகளாகச் செயல்படுவது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது" என்று சாடினார். திரைமறைவில் நடக்கும் இவர்களது அரசியல் 'டீலிங்' இப்போது பொதுவெளிக்கு வந்துவிட்டது. 2026-ல் மக்கள் இவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று விமர்சித்தார்.
மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை திமுகவை மிகக் கடுமையாக எதிர்த்த அதிமுக, அவர் மறைவுக்குப் பிறகு தனது கொள்கையைத் தளர்த்திக் கொண்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார். "கடந்த தேர்தல்களில் சேப்பாக்கம் போன்ற தொகுதிகளில் திமுகவிற்குச் சாதகமாக 'டம்மி' வேட்பாளர்களை நிறுத்தியது முதல், அமைச்சர்களுக்குச் செல்வாக்கு உள்ள இடங்களில் கூட்டத்தைக் கூட்டித் தருவது வரை அனைத்தும் இவர்களின் கள்ளக்கூட்டணியையே காட்டுகிறது. இதனால்தான் மக்கள் அதிமுக மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். திமுக என்னும் தீய சக்தியைத் தமிழகத்திலிருந்து அகற்றப்போகும் ஒரே தலைவராக இன்று விஜய் உருவெடுத்துள்ளதைப் பார்த்துப் பயந்துபோய்த்தான், இந்த இரு கட்சிகளும் கைகோர்த்துத் தாக்குதல் நடத்துகின்றனர்" என கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: தவெக-வில் இணைந்தார் ஃபெலிக்ஸ் ஜெரால்ட்: விஜய்யின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமனம்!