காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஒருவரான ராகுல்காந்தி, அவ்வப்போது சர்ச்சை பேச்சுக்களில் சிக்கி வருகிறார். இதற்கு முன்பாக வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை சாடும்விதமாக எல்லா திருடர்களுக்கும் மோடினு குடும்பப்பேர் இருக்குதே. அது எப்படி? என 2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேசியது பாஜவினரை கொந்தளிக்க வைத்தது. இது தொடர்பான வழக்கில் குஜராத் கோரட்டில் 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று, எம்.பி பதவியை பறிகொடுத்தார் ராகுல்காந்தி.

2 ஆண்டு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்த பிறகே மீண்டும் எம்பி ஆனார். இன்னொரு சமயத்தில் சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கர் பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில் ராகுலை சுப்ரீம் கோர்ட் கடுமையாக கண்டித்தது. ‛‛வரலாறு தெரியாமல் ராகுல் பேசக்கூடாது; இதேபோல வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினால், அவருக்கு எதிராக நாங்களே வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம் என, சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் கடுமையாக எச்சரித்தது. இப்போது, இன்னொரு அவதூறு கருத்தை சொல்லி புதிய சிக்கலில் ராகுல்காந்தி மாட்டிக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: மோடியா? ராகுல்காந்தியா? பாக்., விருது யாருக்கு? மாறி மாறி அடித்துக் கொள்ளும் காங்., - பாஜ!
2005ஆம் ஆண்டு குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்த போது, சொராபுதீன் ஷேக் என்பவர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் அமித் ஷா மீது அதிக அழுத்தம் இருந்தது. அமித் ஷாவை கைது செய்ய சிபிஐ தேடிய போது, திடீரென 4 நாட்களுக்கு காணாமல் போனார். இதன்பின் அவர் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டார். இதன்பின் 3 மாதத்தில் ஜாமீனில் வெளியே வந்த அமித் ஷா, 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மொத்தமாக விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் 2018 ம் ஆண்டில் நடந்த காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, கொலை குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்கள் கூட பாஜக தலைவர் ஆகிறார்கள்? அதுதான் ஆச்சர்யமா இருக்கு... என, அப்போதைய பாஜ தலைவர் அமித் ஷாவை குறை சொல்லி பேசினார். ராகுலின் இந்த பேச்சு பாஜகவினரை ஆவேசப்பட வைத்தது.
இதனை எதிர்த்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைவர் பிரதாப் கத்தியார் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் சைபாசா Chaibasa நகரில் உள்ள எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் இந்த வழக்கை விசாரிக்கிறது. ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும்போதும், நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல்காந்திக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்து வந்தார். அதை நீதிபதி ஏற்க மறுத்து,கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வந்தார்.

கோர்ட்டில் ஆஜராகும்படி திரும்பத் திரும்ப நீதிபதி உத்தரவிட்டும், ராகுல்காந்தி ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்த வழக்கு இன்று சைபாசா கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ராகுல்காந்தி ஆஜராக வில்லை. இதனால் ராகுல் காந்திக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நீதிபதி பிறப்பித்தார். ஜூன் 26ம் தேதி கோர்ட்டில் ராகுல்காந்தி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
ஏதேதோ காரணங்களை சொல்லி கோர்ட்டில் ஆஜராகாமல் ராகுல் தவிர்த்து வந்த காரணத்தால் நீதிபதி இன்று ஸ்ட்ரிக்டான உத்தரவை பிறப்பித்துள்ளார் என, மனுதாரர் பிரதாப் கதியார் தரப்பு வழக்கறிஞர் கூறினார். தற்போது ராகுல்காந்திக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 26ஆம் தேதி நீதிமன்றம் முன்னிலையில் ராகுல் காந்தி ஆஜராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு தகவலா? குற்றம்சாட்டும் ராகுல் காந்தி.. வெளியுறவுத்துறை விளக்கம்..!