சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பேருந்து நிலையத்தில் 22 வயதான இளம்பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது, அவரது அருகே வந்த சுமார் 45 வயதுடைய நபர் ஒருவர் செல்போனில் பேசுவது போல சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். ஷால் அணியாமல் இருந்த அந்த இளம்பெண்ணுக்கு, அந்த நபர் தன்னை மறைமுகமாக வீடியோ பதிவு செய்வது போன்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்களிடம் அந்த நபர் தன்னை தவறான கோணத்தில் வீடியோ எடுப்பதாக இளம்பெண் தெரிவித்தார். உடனே அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற அந்த நபரை பொதுமக்கள் பிடித்துவைத்து, பள்ளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்த 45 வயதான செந்தில்குமார் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக ஊழல் பட்டியல்?! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக! அமைச்சர் மரிய வில்சன் அதிரடி!
செந்தில்குமாரிடம் இருந்த இரண்டு செல்போன்களையும் போலீசார் ஆய்வு செய்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அந்த செல்போன்களில், பல பெண்களின் அனுமதியின்றி தவறான கோணத்தில் பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
போலீஸ் விசாரணையில், பேருந்து நிலையங்கள், மருத்துவக் கடைகள், லிப்ட்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களை குறிவைத்து, செல்போனில் பேசுவது போல நடித்து, மறைமுகமாக வீடியோ பதிவு செய்வதை செந்தில்குமார் வழக்கமாகக் கொண்டிருந்தது தெரியவந்தது. சந்தேகம் வராமல் இருக்க, வீடியோ பதிவை இயக்கிவிட்டு, காதில் செல்போனை வைத்துக்கொண்டு பேசுவது போல நடிப்பதும் அவரது வழக்கமாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பெயிண்டர் வேலை செய்து வந்த செந்தில்குமாருக்கு திருமணமாகியிருந்தாலும், குழந்தைகள் இல்லை. அவரது செயல்பாடுகள் குறித்து அறிந்த அவரது மனைவி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அவரை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, செந்தில்குமாரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவரது செல்போன்களில் இருந்த பெண்களின் தனியுரிமையை மீறும் வகையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் போலீசார் நீக்கினர்.
இந்தச் சம்பவத்தில், தைரியமாக பொதுமக்களிடம் தகவல் தெரிவித்து, போலீசாரை தொடர்புகொண்ட இளம்பெண்ணின் விழிப்புணர்வையும் துணிச்சலையும் போலீசார் பாராட்டினர். இதுபோன்ற சூழ்நிலைகளில், யாராவது அனுமதியின்றி தங்களை மறைமுகமாக படம் பிடிப்பதாகவோ அல்லது வீடியோ பதிவு செய்வதாகவோ சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் சோனம் வாங்சுக்! லடாக் திரும்பும் முன் ராஜ்காட்டில் முக்கிய நிகழ்வு!