தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து இடி, மின்னல் உள்ளிட்ட இயற்கை பாதிப்புகளால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மழை தொடர்பான தெளிவான தகவல்களை அரசு தொடர்ந்து வழங்கி வருவதாகவும் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக 62 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். பர்லியார் அருகே ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்தின் ஓட்டுநர் உயிரிழந்தார். நடத்துநருக்கு கை முறிவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்ட அனைத்து இடங்களும் சீரமைக்கப்பட்டுவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சென்னையில் 250 படகுகள் தயார் நிலை: 1.40 லட்சம் பேர் மீட்புப் பணியில் - அமைச்சர் செங்கோட்டையன்!
கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் நேற்று கூடுதலாக மழை பெய்த போதிலும், தேங்கிய மழைநீர் அதிகாலையிலேயே அகற்றப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் திடீரென கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்த அமைச்சர், நீலகிரி, கொடைக்கானல், ஏலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்று புகைப்படங்கள் எடுப்பதை தற்காலிகமாக தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. முழு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 3,500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. கணக்கெடுப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பயிர்ச் சேதம் குறித்த முழுமையான மதிப்பீடு மழைக்காலம் முடிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் என்றார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகளின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் பாதுகாப்பு மற்றும் இயல்புநிலை மீட்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: 1 லட்சம் சூரிய சக்தி மேற்கூரை..! இதான் இலக்கு.! அமைச்சர் நிர்மல்குமார் உறுதி.!