தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறையில் இருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பிச் சென்ற விவகாரத்தில் சிறைத்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் பணியில் இருந்த ஒன்பது சிறைக் காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அக்டோபர் 26 ஆம் தேதி இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக நாடகமாடி காவலர்களை உள்ளே வரவழைத்தனர்.
அப்போது காவலர்களைத் தாக்கிவிட்டு 17 பேர் ஒரே நேரத்தில் சிறை வளாகத்தை விட்டு வெளியேறினர். இந்தத் தாக்குதலில் சில காவலர்கள் காயமடைந்தனர். சம்பவம் குறித்த தகவல் உடனடியாக மாவட்ட காவல் நிர்வாகத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.தப்பியோடிய கைதிகளில் இதுவரை நான்கு பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 13 பேரைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அண்டை மாவட்டங்களிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறையினர் வனப்பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்.
இதையும் படிங்க: மதுரை சிறுவன் மர்ம மரணத்தில் திடுக் திருப்பம்... காவல்துறை எடுத்த அதிரடி முடிவு... சிக்கப்போவது யார்?
பாதுகாப்புக் குறைபாடுகளுக்குப் பொறுப்பான காவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒன்பது சிறைக் காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் விசாரணை தொடர்கிறது. சிறை வளாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமைதி திரும்புமா? மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூள்வதை தடுக்க பேச்சுவார்த்தை? ஈரான் நம்பிக்கை!