மதுரை மாவட்டம் மேலூர் அருகே வீட்டின் அருகே விளையாடச் சென்ற 7 வயது சிறுவன், பாழடைந்த வீட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெண் உள்ளிட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் (52) – சத்யா (43) தம்பதியினரின் மகன் முத்துவேலன் (7). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். பெரியகருப்பன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், சத்யா தனது குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே விளையாடச் சென்ற முத்துவேலன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் சிறுவனைத் தேடியுள்ளனர். ஆனால், சிறுவனைக் கண்டுபிடிக்க முடியாததால் கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: காதலியை கரகரவென கழுத்தறுத்து கொன்ற காதலன்... லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு...!
இதையடுத்து, கீழவளவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து பல்வேறு இடங்களில் தேடுதல் நடத்தினர். தொடர்ந்து, கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். ட்ரோன் உதவியுடனும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை சிறுவனின் வீட்டிற்கு அருகே உள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் முத்துவேலன் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், கழுத்துப் பகுதியில் கயிறு இறுக்கியதற்கான தடயம் மற்றும் வாயில் ரத்தம் இருந்ததாகவும் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்தனர். சிறுவன் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாகக் கூறிய அவர்கள், அவரது மரணத்துக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை சிறுவனின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின.
இதற்கிடையே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூராய்வில் சிறுவனின் கழுத்துப் பகுதியில் காயம் இருப்பது தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுவனின் மரணம் தொடர்பாகக் கீழவளவு காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலூர் டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாகப் பெண் உள்ளிட்ட இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுவன் எதற்காகப் பாழடைந்த வீட்டிற்குச் சென்றார், அங்கு அவருக்கு என்ன நேர்ந்தது, அவரது உயிரிழப்புக்குக் காரணம் என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறுவன் உயிரிழந்த சம்பவம் தனியாமங்கலம் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் முடிவிலும், உடற்கூராய்வு தொடர்பான மருத்துவ முடிவுகளின் அடிப்படையிலும் சிறுவனின் மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காணாமல் போன சிறுவன் பலி... பாழடைந்த வீட்டிற்குள் கிடைத்த சடலம்... அதிர வைக்கும் திடுக் பின்னணி...!