தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டோடு அனல் பறந்து கொண்டிருக்கும் சூழலில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையில் முன்னணித் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தீவிர ரசிகர்கள் ஒன்றிணைந்து 'தமிழக மக்கள் கழகம்' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் அடுத்தடுத்து அரசியல் கட்சிகளைத் தொடங்கித் தீவிர தேர்தல் களத்தில் நேரடியாகக் குதித்து வரும் தற்போதைய காலகட்டத்தில், நடிகர் அஜித்குமார் ஆரம்பத்திலிருந்தே அரசியலுக்கு அப்பாற்பட்டுத் தனது முழு கவனத்தையும் சினிமா மற்றும் சர்வதேச கார் பந்தயங்களில் மட்டுமே செலுத்தி வருகிறார். அரசியலில் தனக்கு எவ்வித விருப்பமும் இல்லை என்பதைப் பலமுறை வெளிப்படையாக அறிவித்துத் தனது ரசிகர் மன்றங்களையும் கலைத்துவிட்ட நிலையில், அவரது தீவிர ரசிகர்கள் தற்போது சொந்த முயற்சியில் ஒரு அரசியல் அமைப்பைத் தோற்றுவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை பகுதியில் திரண்ட நடிகர் அஜித்தின் தீவிர ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள், தங்களது புதிய அரசியல் இயக்கத்திற்குத் 'தமிழக மக்கள் கழகம்' எனப் பெயரிட்டு முறைப்படி கட்சியைத் தொடங்கியுள்ளனர். மேலும், கட்சியின் அடையாளமாக மஞ்சள், வெள்ளை, சிகப்பு மற்றும் கருப்பு ஆகிய நான்கு வண்ணங்கள் அடங்கிய கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தக் கொடியின் மையப் பகுதியில் இரு கம்பீரமான சிறுத்தைகள் சீறிப்பாய்வது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இப்படியுமா பண்ணுவாங்க? மகள்களை கொன்ற வழக்கில் தாய்க்கு இரட்டை ஆயுள்! உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
புதிய அரசியல் கட்சி தோற்றுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, அடுத்தகட்ட களப்பணிகள், கொள்கை பிரகடனம் மற்றும் தேர்தல் செயல்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் தற்போது அங்கு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நடிகர்கள் தலைமை தாங்கும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில், நடிகர் அஜித்தின் கொள்கை நிலைப்பாட்டிற்கு மாறாக அவரது பெயரையும் அபிமானத்தையும் முன்வைத்து ரசிகர்கள் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளது அப்பகுதியில் பெரும் பேச்சாக மாறியுள்ளதுடன், தமிழக அரசியல் அரங்கிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச தரிசனம் நீட்டிப்பு! செப்.23 வரை கட்டணமில்லை என நிர்வாகம் அறிவிப்பு!