ஜெயக்குமார், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். சென்னை ராயபுரம் தொகுதியில் பலமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதிமுகவின் தீவிர உறுப்பினராகவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் விசுவாசியாகவும் அறியப்படுபவர். இவர் திமுகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர் என்பதால், அவர் திமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால், ஜெயக்குமார் அதிமுகவை விட்டு விலகுவார் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால், இதற்கு எதிராக ஜெயக்குமார் உடனடியாக பதிலளித்தார். வாழ்நாள் முழுவதும் எனது உயிர் மூச்சு அதிமுக தான். தீய சக்தியான கருணாநிதியை ஒழிக்க வேண்டும் என்று தான் அதிமுக ஆரம்பிக்கப்பட்டது. அந்த வழியில் தான் நான் பயணிக்கிறேன் என்று திட்டவட்டமாக மறுத்தார்.
தமிழக அரசியல் வரலாற்றைப் பார்க்கும்போது, கட்சி மாறுவது அசாதாரணமான நிகழ்வு அல்ல. கடந்த காலங்களில், அதிமுக மற்றும் திமுக இடையே பல முக்கிய தலைவர்கள் கட்சி மாறியுள்ளனர். உதாரணமாக, 2020ஆம் ஆண்டு கோவை மாவட்ட முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் திமுகவில் இணைந்தார்.
இதையும் படிங்க: நன்றியை மறந்துவிட்டு பேசக்கூடாது.. வைகோ பேச்சுக்கு ஜெயக்குமாரின் தரமான பதிலடி..!

இதற்கு காரணமாக, அவர் அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், ஜெயக்குமாரின் விஷயத்தில், அவரது நீண்டகால விசுவாசமும், அதிமுகவின் மீதான அவரது அர்ப்பணிப்பும் இத்தகைய மாற்றத்தை நம்புவதற்கு இடமளிக்கவில்லை. மேலும், திமுகவுக்கு எதிராக அவர் தொடர்ந்து வைக்கும் கடுமையான விமர்சனங்கள், அவரது முடிவு உறுதியானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இந்த நிலையில், மீண்டும் ஜெயக்குமார் திமுகவில் இணைவுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உடல் மண்ணுக்கு உயிர்அதிமுகவிற்கு என்று தெரிவித்தார். தனது உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்று தெரிவித்த அவர், நான் அதிமுகவை விட்டு விலக மாட்டேன் என்பதை முதலமைச்சர் ஸ்டாலினுக்கே தெரியும் என்று கூறினார்.
இதையும் படிங்க: மக்கள் தினமும் போராடிட்டு வராங்களா? வீண்பழி சுமத்துராரு... முதல்வரை சாடிய தமிழிசை