கடந்த 51 மாத கால திமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் கூட கரை காட்ட வில்லை என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
பொய்யான தகவல்களை விளம்பரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மக்களிடையே பரப்புவதில் தான் திமுக அரசு குறியாக இருந்தது என்றும் இது வேதனைக்குரிய விஷயம் எனவும் அதிமுக தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சியின் அலங்கோலங்களை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருப்பதாகவும் விரைவில் விடிவு காலம் வரவுள்ளது என்பதை இந்த நேரத்தில் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜெ. படத்துடன் பிரேமலதா... இதுக்கு தான் அப்படி போட்டேன்! L.K.சுதீஷ் விளக்கம்..!
திருவள்ளூர் தெற்கு மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை என்றும் பாதாள சாக்கடை முறையாக அமைக்கப்படவில்லை எனவும் பல்வேறு சுகாதார சீர்கேடுகளால் மக்கள் அவதி அடைந்து வருவதாகவும் அதிமுக குற்றம் சாட்டியிருக்கிறது.

இந்நிலையில், திருவள்ளூர் தெற்கு மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளையும், நிர்வாக சீர்கேடுகளையும், கண்டும் காணாமலும் இருந்து வரும் திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும், அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
வரும் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பில் ஆவடி மாநகராட்சி எம்ஜிஆர் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும் இந்த ஆர்ப்பாட்டமானது முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தலைமையில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவில் ஐக்கியமாக காத்திருக்கும் முக்கிய அதிமுக புள்ளிகள்... இபிஎஸை டரியல் ஆக்கிய ஆர்.எஸ்.பாரதி...!