உயிர்ம வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் நிரந்தர மண்புழு உரக் கூடங்கள் அமைத்திட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.
தேசிய உயிர்ம உற்பத்தித் திட்டத்தில் புதிதாக பதிவு செய்யும் விவசாயிகளுக்கான பதிவு கட்டணமும், மாறுதல் காலத்தில் உள்ள விவசாயிகளுக்கான புதுப்பித்தல் கட்டணமும் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, உயிர்ம விவசாயிகளுக்கு உயிர்மச் சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும்.
கடந்த ஆண்டு புதிதாக பதிவு செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே கட்டண விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு முதல் உயிர்மச் சான்று பெறுவதற்கான மாறுதல் காலத்திலும் விவசாயிகள் தொடர்ந்து உயிர்மை நிலையைப் பேணுவதை ஊக்குவிக்கும் முகமாக, மாறுதல் காலத்திற்கும் இந்த கட்டண விலக்கு விரிவுபடுத்தப்படும்.
இதையும் படிங்க: தவெக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்... எதிர்ப்பார்ப்புடன் சட்டப்பேரவை தொடக்கம்..!!
தேசிய உயிர்ம உற்பத்தித் திட்டத்தில் சான்றளிக்கப்படும் உயிர்ம விளைபொருட்களில் நச்சுப் பொருட்களின் தன்மையை விவசாயிகள் அறிந்து, அவற்றின் தரத்தை உறுதிப்படுத்தி, உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு சந்தைகளில் விற்பனை செய்து அதிக விலை பெறவும், நஞ்சற்ற பொருட்களை நுகர்வோர் பெறவும், நச்சு மதிப்பீடு பரிசோதனை செய்வதற்கான கட்டணத்திற்கு முழு மானியம் வழங்கும் பொருட்டு 25 லட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.
களர், உவர்தன்மையால் பாதிக்கப்பட்ட மற்றும் வளம் குறைந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காக, மண் சீர்திருத்தம் குறித்து 2,000 ஏக்கரில் செயல்விளக்கங்கள் மேற்கொள்ள 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
மண் நல மேம்பாடு குறித்த தொழில்நுட்பங்களை உழவர் பெருமக்களுக்கு எடுத்துரைக்க விழிப்புணர்வு மற்றும் விளம்பரப் பணிகள் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும்.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள, நேரடி நெல் விதைப்பு, நீர் மறைய நீர் கட்டும் பாசன முறை, மெல்லக் கரையும் உரங்களின் பயன்பாடு ஆகிய முறைகளைப் பின்பற்றி, பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 50 சதவீதம் வரை தவிர்த்து, கரிமத்தை அகற்றி மண்ணில் சேமிக்கும் விவசாயிகளுக்கு கார்பன் வர்த்தகம் வாயிலாக கூடுதல் வருமானம் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் 2,000 ஏக்கரில் செயல்விளக்கங்கள் அமைத்து, கண்காணிப்பு மற்றும் சீராய்வு நெறிமுறைகளை உருவாக்க மாநில நிதியிலிருந்து 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு மண் வளப் பாதுகாப்பு இயக்கம் 2026–27ஆம் ஆண்டில் 122 கோடியே 51 லட்சம் ரூபாய் நிதியில் 10 கூறுகளுடன் செயல்படுத்தப்படும்.
நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விநியோக மானியத்திற்கான சிறப்புத் திட்டம்:
விவசாயிகளுக்கு இடுபொருட்கள் போதிய அளவில், உரிய பருவத்தில் கிடைக்கச் செய்ய இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.
நெல் உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்கும் தரமான விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான மானியத்தை 2026–27ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது.
ஆனால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலன் கருதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தாயுள்ளத்தோடு அறிவுறுத்தியபடி, விதைப் பண்ணைகள் அமைத்து 7,730 மெட்ரிக் டன் சான்று நெல் விதை உற்பத்தி செய்து தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமைக்கு வழங்கும் விவசாயிகளுக்கு நெல் விதை உற்பத்தி மானியமும், 14,570 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட விதைகளை மானிய விலையில் விநியோகிக்க நெல் விதை விநியோக மானியமும் வழங்குவதற்காக 2026–27ஆம் ஆண்டில் 34 கோடியே 72 லட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.
இதையும் படிங்க: அதிக மகசூல் எடுத்தால் ரூ.2.50 லட்சம் பரிசு! நம்மாழ்வார், அஞ்சலையம்மாள் பெயரில் விருது! அசத்தல் அறிவிப்பு!