தேசிய விருது பெற்ற திரைப்படங்களைத் தயாரித்த ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன் உரிமையாளர் சதீஷ்குமார் மீது, தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தங்கமீன்கள், குற்றம் கடிதல் போன்ற தேசிய விருது பெற்ற படங்களைத் தயாரித்த சதீஷ்குமார், கடந்த 2015-ஆம் ஆண்டு சினிமா பைனான்சியர் ககன் போத்ராவிடம் பணம் பெற்றிருந்தார். இந்தப் பணத்தைத் திரும்ப வழங்க அவர் அளித்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்ததால், ககன் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது, சதீஷ்குமார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதித்துறை நடுவர் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவரின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களைத் தாக்கல் செய்து, வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரினார். தன்னையும், நீதித்துறை நடுவரையும் மிரட்டும் நோக்கில், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தங்களது அழைப்பு விவரங்களைச் சதீஷ்குமார் சட்டவிரோதமாகப் பெற்றுள்ளதாகக் ககன் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன் அவர்கள் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தார்,
தொலைப்பேசி அழைப்பு விவரங்களைச் சதீஷ்குமார் தானாக உருவாக்கினாரா அல்லது சேவை வழங்கும் நிறுவனங்களிடம் முறைப்படி பெற்றாரா?, இது குறித்துச் சென்னை சைபர் கிரைம் காவல்துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும். விசாரணை நடத்தி 4 வாரங்களுக்குள் இது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 26-ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கமல்ஹாசனின் பெயர், போட்டோக்களை யூஸ் பண்ணக்கூடாது..!! கறார் காட்டிய ஐகோர்ட்..!!
இதையும் படிங்க: அரசியல் நாகரிகம்! - விமான நிலையத்தில் துர்க்கா ஸ்டாலினை சந்தித்த நயினார் நாகேந்திரன்