நகை திருட்டு தொடர்பாக கோயில் ஊழியர் அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்கி விசாரித்தபோது, அவர் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது. இது தொடர்பாக பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அஜித்குமார் மரணத்துக்கு காரணமான போலீசார் மீது ஏற்பட்ட கோபத்தை போலவே, புகார் கொடுத்த நிகிதா மீதும் மக்களின் கோபம் திரும்பியுள்ளது.
திண்டுக்கல்லில் உள்ள எம்விஎம் அரசு கல்லூரியில் நிகிதா பேராசிரியையாக வேலை பார்க்கிறார். தாவரவியல்துறை தலைவரும் அவர்தான். இவரது தந்தை ஜெயபெருமாள் துணை கலெக்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிகிதா தனக்கு தெரிந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நகை திருட்டுபோன விஷயத்தை சொன்னதால்தான் விசாரணையை தனிப்படை போலீசார் தீவிரப்படுத்தி அஜித்குமாரை அடித்து துன்புறுத்தி உள்ளனர் என தகவல்கள் வெளியான நிலையில் நிகிதாவை பற்றிய பல விஷயங்களும் வெளிவரத் துவங்கியுள்ளன.
இதையும் படிங்க: அரசு வேலை 80 கி.மீ தூரத்தில்.. எனக்கு இதில் திருப்தி இல்லை.. அஜித்குமார் சகோதரர் வேதனை..!
நிகிதா மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளன. 2010ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது, துணை முதல்வரின் உதவியாளரை தங்களுக்கு தெரியும் என கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி திருமங்கலத்தைச் சேர்ந்த சிலரிடம் ரூ.16 லட்ச ரூபாயை மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, திருமங்கலம் போலீசார், நிகிதா அவர் தாய், தந்தை மீது வழக்கு பதிந்து விசாரித்துள்ளனர்.
இதேபோல செக்கானூரணியை சேர்ந்து ஒருவருக்கு அரசு கல்லூரியில் பேராசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக வந்த புகாரிலும் நிகிதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிகிதாவைப் பற்றி தனக்கு 20 ஆண்டுக்கு முன்பே தெரியும் என தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் கூறினார். தன்னை திருமணம் செய்து ஒரு நாள் குடித்தனம் நடத்தி விட்டு பணத்தை பறித்துச் சென்ற மோசடி பேர்வழிதான் நிகிதா என திருமாறன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நிகிதா மீதுஇன்னொரு புகார் வந்துள்ளது. மதுரை சுற்று வட்டாரத்தில் மட்டுமின்றி சென்னையிலும் நிகிதா கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது. 2011-ல் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.48 லட்சம் மோசடி செய்ததாக எழும்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார். துணை முதல்வர் அலுவலகத்தில் முக்கிய அதிகாரி எங்களுக்கு வேண்டப்பட்டவர். அதனால் உங்களுக்கு அரசு வேலை கன்பார்ம் என கூறி, 48 லட்ச ரூபாயை, நிகிதா, அவரது தாய் சிவகாமி, அண்ணன் கவியரசு ஆகியோர் வாங்கினர். ஆனால், வேலை வாங்கித் தரவில்லை. இழுத்தடித்தனர்.
அவர் வசிக்கும் திருமங்கலத்துக்கு சென்று விசாரித்தபோதுதான் என்னைப்போலவே இன்னும் பலரிடம் வேலை வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றியிருக்கிறார் என அறிந்து அதிர்ச்சியடைந்தேன். போலீசிடம் போகாதீர்கள் பணத்தை திரும்ப தந்து விடுகிறோம் என்றனர். சொத்தை விற்று தருகிறோம் என நிகிதா கெஞ்சினார். பல ஆண்டாகியும் பணத்தை திரும்ப தராத நிலையில், அஜித்குமார் வழக்கு விவகாரத்தை அறிந்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தேன். என் பணத்தை மீட்டு தர வேண்டும். நிகிதா குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செந்தில்குமார் மனுவில் கூறியுள்ளார்.
இந்த பரபரப்பான சூழலில் நிகிதா கல்லூரிக்கு வரவில்லை. தலைமறைவாகி விட்டார் என செய்திகள் பரவின. ஆனால், தான் தலைமறைவாகவில்லை என நிகிதா வீடியோ வெளியிட்டார். அஜித்குமார் லாக்கப் மரணம் நடந்தது ஜுன் 27 ம்தேதி.அதற்கு முன்பே, உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயை கவனிப்பதற்காக, நிகிதா மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். ஜூன் 17 முதல் கடந்த 5ம் தேதி வரை அவர் விடுப்பில் இருந்தார். லீவு முடிந்து கடந்த 7 ம்தேதி திங்களன்று மீண்டும் கல்லூரிக்கு சென்றார். மாணவிகளுக்கு வகுப்பு எடுத்தார்.
கல்லூரி முடிந்தவுடன் மாலையில் கல்லூரி பிரதான பாதை வழியாக செல்லாமல் சிவப்பு நிற காரில் கல்லூரியின் பின்புறம் உள்ள ஒத்தையடி பாதை வழியாக வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் இன்று மீண்டும் கல்லூரிக்கு வராமல் லீவு எடுத்தார், நிகிதா. இன்று முதல் இன்னும் 19 நாட்களுக்கு மருத்துவ விடுப்பில் அவர் சென்றுள்ளதாக, கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இம்மாத இறுதியில்தான் பணிக்கு திரும்புவார் எனவும் கல்லூரி வட்டாரங்கள் கூறின. ஆனால், மதுரை திருமங்கலத்தில் அவர் வீடு பூட்டியே கிடக்கிறது. எங்கே போனார் என தெரியவில்லை என அக்கம் பக்கத்தினர் கூறினர்.
இதையும் படிங்க: அஜித்குமார் லாக்அப் டெத் வழக்கு.. தலைமறைவான நிகிதா கல்லூரிக்கு ரிட்டர்ன்..!