சென்னை மாநகராட்சியில் கழிவுநீர் குழாய் அடைப்புகளை அகற்றுவதற்கு அதிநவீன ரோபோ தொழில்நுட்பத்தை சென்னை குடிநீர் வாரியம் பயன்படுத்தி வருகிறது. இந்த முயற்சி, மாநகரின் கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றுகிறது. தற்போது கழிவுநீர் உந்து நிலையங்களும் ரோபோக்களை பயன்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. திருவான்மியூர் பகுதியில் உள்ள கழிவுநீர் பம்பிங் நிலையங்களில் 'வில்போர்' என்ற அதிநவீன ரோபோக்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு முன்னர், சில மண்டலங்களில் கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்ய இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.

திருவான்மியூர் கழிவுநீர் உந்து நிலையம் ஒரு நாளைக்கு 15 மில்லியன் லிட்டர் கழிவுநீரை கையாளும் திறன் கொண்டது. இதுபோன்ற ரோபோ சாதனங்கள் ஏற்கனவே ஆந்திராவின் நெல்லூர், கேரளாவின் திருவனந்தபுரத்தில் பயன்பாட்டில் உள்ளன. சென்னையில் மொத்தம் 375 கழிவுநீர் உந்து நிலையங்கள் உள்ளன. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், மற்ற உந்து நிலையங்களிலும் இதுபோன்ற ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த ஜென்ரோபோடிக்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய இந்த ரோபோக்கள் கடந்த ஒரு வருடமாக குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய மாநகராட்சியால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இனி பளபளன்னு மாறப்போகுது மெரினா பீச்.. களத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள்..!
இந்த ரோபோக்கள், ஆபத்தான மற்றும் கடினமான சூழல்களில் மனித உழைப்பை குறைத்து, திறமையாகவும் பாதுகாப்பாகவும் பணியாற்றுகின்றன. கழிவுநீர் குழாய்களில் உள்ள கசடுகளை அகற்றுவதற்கு உயர் அழுத்த நீர் மற்றும் சென்சார் தொழில்நுட்பங்களை இவை பயன்படுத்துகின்றன. இதனால், குழாய் அடைப்புகள் விரைவாக நீக்கப்பட்டு, கழிவுநீர் வழிந்தோடுவது தடையின்றி உறுதி செய்யப்படுகிறது.
மேலும், இந்த தொழில்நுட்பம் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.
சென்னை மாநகராட்சி, 1998 தெருக்களில் 282 தூர்வாரும் எந்திரங்கள், 161 ஜெர்ராடிங் எந்திரங்கள் மற்றும் 57 கழிவுநீர் உறிஞ்சும் எந்திரங்களை பயன்படுத்தி, 350 உதவி பொறியாளர்கள் மற்றும் 2,000 களப்பணியாளர்களுடன் இப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த நான்கு நாட்களில் 2,876 தெருக்களில் கழிவுநீர் கட்டமைப்புகள் தூர்வாரப்பட்டுள்ளன. பொதுமக்கள், கழிவுநீர் அடைப்பு தொடர்பான புகார்களை மாநகராட்சி அலுவலகங்களில் பதிவு செய்யலாம், அவை உடனடியாக சரிசெய்யப்படும். இந்த முயற்சி, சென்னையை தூய்மையான மற்றும் வெள்ளமின்றி வைத்திருக்க உறுதுணையாக உள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிற்சங்க தலைவர் ஜி.பீம் ராவ் கூறுகையில், "இது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரவேற்கத்தக்க முயற்சி. மனிதர்களின் நேரடி தலையீட்டை குறைக்கவும் இது உதவும். இதுபோன்ற முயற்சிகள் அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புற இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட வேண்டும். மேலும், வழக்கமான பராமரிப்புக்காக கண்காணிக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாது கழிவுநீர் நெட்வொர்க் பராமரிப்புக்கு பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேறு பணிகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சென்னையில் கழிவுநீர் மற்றும் நீர் நெட்வொர்க் பராமரிப்புக்காக சுமார் 2,850 தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மக்களே.. இனி பார்க்கிங்கிற்கு 'NO CHARGE'.. சென்னை மாநகராட்சி சொன்ன குட் நியூஸ்..!