சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) நகரின் பொதுப் போக்குவரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், நவீனமாகவும் மாற்றுவதற்கு மற்றொரு பெரிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் வியாசர்பாடி டிப்போவிலிருந்து 120 மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்திய நிலையில், இன்று (ஆகஸ்ட் 11) முதல் பெரும்பாக்கம் டிப்போவிலிருந்து மேலும் 135 மின்சார பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இதில் 55 குளிர்சாதன (AC) பேருந்துகள் அடங்குவது சென்னையில் முதல் முறையாகும், இது பயணிகளுக்கு கோடை காலத்தில் வசதியான பயண அனுபவத்தை வழங்கும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய பேருந்துகள் சென்னையின் ஐ.டி. காரிடார் பகுதிகளான பழைய மகாபலிபுரம் சாலை (OMR) உள்ளிட்ட 13 வழித்தடங்களில் இயக்கப்படும். முக்கிய வழித்தடங்களில் சிறுசேரி-விமான நிலையம் (MAA 2), பிராட்வே-கேளம்பாக்கம் (102), தி.நகர்-திருப்போரூர் (19), திருவான்மியூர்-கிளாம்பாக்கம் (95X) ஆகியவை அடங்கும். இந்தப் பேருந்துகள் ஒவ்வொன்றும் 200 கி.மீ. தூரம் வரை இரண்டு மணி நேர மின்னேற்றத்தில் இயங்கக் கூடியவை. இவை 39 இருக்கைகள், பாதுகாப்பு பெல்ட்டுகள், சி.சி.டி.வி. கேமராக்கள், அவசர பொத்தான்கள், மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 79வது சுதந்திர தின விழா ஒத்திகை.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்..!
இந்தத் திட்டம் உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) ஆதரவுடன் செயல்படுத்தப்படும் சென்னை நகர கூட்டாண்மை: நிலையான நகர சேவைகள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்காக பெரும்பாக்கம் டிப்போ ₹49.56 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு, 32 பேருந்துகளை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யும் வசதியுடன் தயாராகியுள்ளது. இந்தப் பேருந்துகளை OHM குளோபல் மொபிலிட்டி (அசோக் லேலண்டின் துணை நிறுவனம்) இயக்குகிறது, இதற்கு MTC ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் கட்டணம் செலுத்தும் மொத்த செலவு ஒப்பந்த மாதிரியைப் பின்பற்றுகிறது.

முதல் கட்டமாக 625 மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த ₹697 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் மீதமுள்ள 370 பேருந்துகள் சென்ட்ரல், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி டிப்போக்களிலிருந்து பிப்ரவரி 2026க்குள் இயக்கப்படும். இரண்டாம் கட்டமாக 800 மின்சார பேருந்துகள் அறிமுகமாகவுள்ளன. இந்த முயற்சி சென்னையில் காற்று மாசுபாட்டைக் குறைத்து, பசுமை போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும்.
இதையும் படிங்க: சென்னையில் நாளை இந்த ஏரியாக்களில் முகாம்.. பயன்படுத்திக்கோங்க மக்களே..!!