சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும், திராவிடக் கட்டிடக்கலை மற்றும் இந்தோ-சாரசெனிக் பாணியின் சங்கமமாகவும் திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'விக்டோரியா பொது அரங்கம்', பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு நாளை (டிசம்பர் 23) மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட உள்ளது. இதனைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து, சென்னையின் பாரம்பரியப் பெருமையை மீட்டெடுக்க உள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள இந்த அரங்கம், காலப்போக்கில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனை அதன் பழமை மாறாமல், அதே சமயம் நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் புனரமைக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பழமையான செங்கல் வேலைப்பாடுகள், கலைநயம் மிக்க மரத்தூண்கள் மற்றும் மேற்கூரைகள் ஆகியவை அதன் தொன்மை மாறாமல் நிபுணர்களால் சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
நாளை நடைபெறும் திறப்பு விழாவிற்காக அரங்கம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுத் தயாராக உள்ளது. இந்தப் புனரமைப்புப் பணிகள் குறித்துப் பேசிய அதிகாரிகள், "வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விக்டோரியா ஹால் இனி சென்னையின் கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளின் மையமாகத் திகழும். அடுத்த தலைமுறைக்கு நமது வரலாற்றைக் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தச் சீரமைப்புப் பணிகள் நுணுக்கமாகச் செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்தனர். முதலமைச்சர் இதனைத் திறந்து வைப்பதன் மூலம், சிங்காரச் சென்னையின் மகுடத்தில் மற்றுமொரு வைரம் பதிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: வரைவு வாக்காளர் பட்டியல்: சென்னையில் இன்று 2வது நாளாக சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!!
இதையும் படிங்க: SIR பணிகளுக்கு பின் வந்த அதிர்ச்சி தகவல்..!! 2 நாள் சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க சென்னை மக்களே..!!