தமிழக அரசு புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான திட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டையில் இடநெருக்கடி நிலவுவதால் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் அவசியம் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்றாலும், தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மற்றும் அதற்கான அணுகுமுறை குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அரசு பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி கொண்ட 15 மாடி கட்டிட வளாகத்தை அமைக்க திட்டமிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த இடம் மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது. அப்பகுதியில் உள்ள கடற்கரையை பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் படகுகளை நிறுத்தவும், வலைகளை உலர்த்தவும் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு கட்டிடம் எழுப்பப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்பதால் இந்த முடிவு பொருத்தமற்றது என்று பெ.சண்முகம் சுட்டிக்காட்டியுள்ளார்.சென்னை நகருக்குள்ளேயே புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதற்கு பல்வேறு மாற்று இடங்கள் உள்ளன என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக அரசுக்கு சொந்தமான கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் பகுதியில் பெரிய அளவிலான நிலம் கிடைக்கிறது. அங்கு சுமார் 160 ஏக்கர் நிலம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இடம் போக்குவரத்து வசதி, பாதுகாப்பு மற்றும் எதிர்கால விரிவாக்கத் தேவைகளுக்கு மிகவும் ஏற்றதாக அமைந்துள்ளது. வருங்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட இங்கு போதுமான இடவசதி இருக்கும் என்பதால் இதைவிட சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.மாற்று யோசனைகளை முறையாக ஆராய்வதற்கு பதிலாக, தங்களுக்கு பிடித்த இடத்தைத் தேர்வு செய்து அவசர அவசரமாக அரசாணை வெளியிட்டுள்ளனர் என்று பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். இது “தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்” என்ற பழமொழியைப் போல, பொருத்தமற்ற இடத்தை வலியுறுத்தும் செயலாக அமைந்துள்ளது என்பது அவரது கருத்து. தலைமைச் செயலகம் போன்ற நீண்டகால நிர்வாக வளாகம் அமைப்பதில் அவசரப்படக் கூடாது. அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளையும் கேட்டறிந்து, ஒருமித்த முடிவு எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!
தற்போதைய தலைமைச் செயலகத்தில் இடப்பற்றாக்குறை உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டாலும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இடம் தேர்வு செய்வது சரியல்ல. சென்னைக்குள்ளேயே உள்ள அரசு நிலங்களை முறையாக பயன்படுத்தினால் மக்கள் பாதிப்பு இல்லாமல் திட்டத்தை செயல்படுத்த முடியும். எனவே மாற்று இடங்களை ஆராய்ந்து, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துகளை மதித்து முடிவு எடுக்க வேண்டும் என்பதே பெ.சண்முகத்தின் நிலைப்பாடாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன
இதையும் படிங்க: தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!