தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதங்களில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக முதியோர் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு முறைகளை அறிமுகப்படுத்துவதுடன், பிரசாதத்தின் தரம், சுகாதாரம், விலை மற்றும் பேக்கிங் ஆகியவற்றில் புதிய தரநிலைகளை அமல்படுத்தியுள்ளது.
தற்போது பெரும்பாலான கோயில்களில் அன்னதானமாக சாதமும் சில உணவு வகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் இவை முதியவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதாக இல்லை. எனவே ஸ்ரீரங்கம், பழனி, திருவண்ணாமலை, திருச்செந்தூர் உள்ளிட்ட 17 முக்கிய திருக்கோயில்களில் சத்தான, ஆரோக்கியமான உணவு வகைகளைச் சேர்க்க ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. காலை மற்றும் இரவு உணவுகளையும் அன்னதானத்தில் இணைக்கும் திட்டமும் பரிசீலிக்கப்படுகிறது.
பிரசாதத் தரத்தை உயர்த்தும் வகையில், தனியார் ஒப்பந்தக்காரர்கள் வெளியே சமைத்து விற்பனை செய்யும் பழைய முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இனி முக்கிய கோயில்களில் நிர்வாகங்களே தங்கள் வளாகத்திற்குள்ளேயே பிரசாதங்களைத் தயாரித்து வழங்கும். இந்தத் திட்டம் ஏற்கனவே 37 முக்கிய திருக்கோயில்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!
தஞ்சாவூர் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில், கோயம்புத்தூர் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் அமைச்சர் ரமேஷ் இந்த புதிய பிரசாதத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

10 வகையான பொதுவான பிரசாதங்களுக்கான மூலப்பொருட்கள், தயாரிப்புச் செலவு, அளவு மற்றும் விற்பனை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சான்றளிக்கப்பட்ட ஆவின் நெய் மற்றும் கூட்டுறவுப் பண்டகசாலைகளின் தரமான பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த இலைத் தட்டுகள் மற்றும் சீல் செய்யப்பட்ட பெட்டிகளில் பிரசாதங்கள் வழங்கப்படும். பேக்கிங்கில் தயாரிப்பாளர் பெயர், முகவரி, நிகர எடை, தயாரித்த தேதி, காலாவதி தேதி, அதிகபட்ச சில்லறை விலை மற்றும் புகார் தொடர்பு விவரங்கள் கட்டாயம் இடம்பெறும்.
அமைச்சர் ரமேஷ் கூறுகையில், “பக்தர்களுக்கு உயர்தரமான, சுத்தமான பிரசாதங்கள் கிடைப்பதை உறுதி செய்வதே முதன்மை நோக்கம். தரம், விலை மற்றும் சுகாதாரத்தில் சீரான தன்மை ஏற்படும்” என்றார். இந்த மாற்றங்கள் பக்தர்களின் நலனையும் கோயில் நிர்வாகத்தின் நம்பகத்தன்மையையும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கண்ணாடி மாளிகையிலிருந்து கற்கோட்டையில் கல் எறிவது போல..! குடமுழுக்கு விவகாரம்..!! சேகர்பாபு விமர்சனம்.!!