தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரன் குற்றவாளி என அறிவித்தார். மேலும் தண்டனை விவரம் ஜூன் 2-ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.

மேலும், காவல்துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது: “குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்!”. குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம். சட்டநீதியையும் - பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்! எனவும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. முதல் அரக்கோணம் குற்றச்சாட்டு வரை..! அப்பாவாக ஸ்டாலின் பதில் என்ன? தமிழிசை கிடுக்குப்பிடி..!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளது; அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது.

இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகத் தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக நான் தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை வழங்கினேன்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை நடத்தியது. அப்போது, தமிழக முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் காவல் துறையின் தவறால் முதல் தகவல் அறிக்கை வெளியாகி,
பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, அவருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், அலட்சியமாகச் செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் இருந்தே இந்தத் தொகையை வசூலித்துக் கொள்ளலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதை மக்கள் மறக்கவில்லை.

தொடர்ந்து இவ்வழக்கைத் துரிதமாக விசாரிக்க, டிசம்பர் 28ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகே ஜனவரி 5ஆம் தேதி ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் பிப்ரவரி 24ஆம் தேதி ஞானசேகரனுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சென்னை, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடைபெற்றதால் மட்டுமே இந்த வழக்கு விரைவாக நடத்தப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காகச் சென்னை உயர்நீதிமன்றத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வெள்ளைக்கொடியா? காவிக்கொடியா? இபிஎஸ் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் நச் பதில்..