சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றங்களையும் ஞானசேகரன் மட்டுமே செய்திருக்க முடியுமா என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் குற்றத்திற்கான தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்..
தமிழகத்தில் ஒரு அவல நிலை என்ன என்றால்.. பல்கலைக்கழகங்களில் பரிட்சை முடிவை எதிர்பார்த்து காத்திருக்கலாம் ஆனால் தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் குற்றத்திற்கான தீர்ப்பை எதிர்பார்த்து நாமெல்லாம் காத்திருக்கிறோம். மனதிற்கு இன்னொரு வருத்தமான கருத்து என்ன என்றால். பாலியல் குற்றங்களுக்கு அரிதாக கருத்து சொல்ல வேண்டியிருக்கலாம். ஆனால் இப்பொழுது அடிக்கடி கருத்து சொல்ல வேண்டி இருக்கிறது என்று அவல நிலை தமிழகத்தில் நிலவுகிறது என்பது மிகவும் வருத்தம் அளிக்க கூடிய ஒன்று..

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்பட்டிருக்கிறது. ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. இதை வரவேற்போம். ஆனால் தீர்ப்பு இரண்டாம் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்பது ஏமாற்றம் அளித்தாலும், இரண்டாம் தேதி தீர்ப்பு இனிமேல் பெண்களுக்கு எதிராக யாரும் குற்றங்கள் இழைக்கக் கூடாது என்ற எச்சரிக்கை கொடுக்கும் தீர்ப்பாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம். ஆனால் ஞானசேகரன் 11 வழக்குகளில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறான். ஆனால் தமிழக காவல்துறையினரால் குற்றவாளி என்று அவன் மட்டுமே அடையாளம் காணப்பட்டு இருக்கிறான்.
இதையும் படிங்க: அமைச்சர்கள் சுருட்டுன பணத்துல பல பட்ஜெட் போடலாம்.. இன்னும் 10 மாசம் தான்; தமிழிசை கவுண்டவுன்..!

இத்தனை குற்றங்களும் அவன் மட்டுமே செய்திருக்க முடியுமா? என்ற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் தொக்கி நிற்கிறது. யார் அந்த சார்?. இதற்கும் பதில் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் இருக்கிறது. கொடூர குற்றங்கள் செய்யும் மிருகங்கள் போன்ற ஞானசேகரன் போன்றவர்களை கேட்கிறேன்.! எனக்கு எட்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறாள், அதனால் எனக்கு தண்டனை சலுகை வேண்டும் என்று கேட்கிறாயே? இதே போல் ஒரு பெண் குழந்தையை தான் நீ சீரழித்திருக்கிறாய்.! அப்போது அந்தப் பெண் குழந்தையின் மனம் எவ்வளவு பதைப் பதைத்திருக்கும்.?
எனக்கு வயதான தாய் இருக்கிறார். அதனால் சலுகை கொடுங்கள் என்று கேட்கிறாயே.! தமிழகத்தில் ஒரு பெண் குழந்தை பாதிக்கப்பட்டாலும் தமிழகத்தில் உள்ள அத்தனை தாய்மார்களும் பரிதவித்துப் போகிறார்கள் என்பது உனக்கு தெரியாதா..? என் வங்கிக் கணக்கு முடக்கப்படக்கூடாது என்று சொல்கிறாயே! உனது செயல்னால் எத்தனை குடும்பங்கள் முடங்கிப் போய் கிடக்கின்றன என்பது உனக்கு தெரியாதா..? ஒரு ஆறுதல் என்ன என்றால் இவன் கோரிக்கை எல்லாம் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

இன்னொரு கேள்வியும் என் மனதில் தொக்கி நிற்கிறது. பொள்ளாச்சி வழக்கிற்காக இனிப்புகளை வழங்கி கொண்டாடிய திராவிட முன்னேற்ற கழகம். இந்த பாலியல் பிரச்சனை தமிழக முழுவதையும்உலுக்கிக் கொண்டிருந்த நேரத்தில் எந்தவித கண்டன குரலையும் எழுப்பவில்லை. அக்கட்சியின்பெண் தலைவர்கள் எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. 23ஆம் தேதி இந்த நிகழ்வு நடக்கிறது. போராட்டத்திற்கு பின்பு 25ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்படுகிறது. 26 ஆம் தேதி பாஜகவும் அதிமுகவும் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, நான் உட்பட தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.
ஆக குற்றங்களை எதிர்த்து குரல் கொடுக்க கூட தமிழகத்தில் இடமில்லை என்ற சூழ்நிலை நிலவுகிறது.. இன்னொன்றையும் இங்கே பதிவிட நினைக்கிறேன். அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றமாக இருக்கட்டும், இப்பொழுது அரக்கோணத்தில் பரிதவித்துக் கொண்டிருக்கிற ஒரு பெண்ணின் பரிதவிப்பு குரலாக இருக்கட்டும், இதில் ஒரே மாதிரியாக குற்றம் தமிழகத்தில் இழைக்கப்படுகிறது. பாலியல் குற்றத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சொன்னது நாங்கள் மட்டுமே பாதிக்கப்படவில்லை எங்களோடு சேர்ந்து பல பெண்கள் பலருக்கு விருந்தாக்கப்படுகிறார்கள் என்ற செய்தி நம்மை நிலைகுலையச் செய்கிறது.

பெண்களைப் பாதுகாக்க வேண்டிய திராவிட மாடல் அரசு இதற்கு என்ன பதில் சொல்ல இருக்கிறது குறிப்பாக "அப்பா" இதற்கு என்ன பதில் சொல்கிறார்.. ஆனாலும் ஜூன் இரண்டை நோக்கி நம்பிக்கையோடு காத்திருப்போம் என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீதியாக இருக்க வேண்டும்.. தீர்ப்பாக இருக்க கூடாது.. ஞானசேகரன் வழக்கில் சீமான் கருத்து..