டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதுகுறித்து விமர்சித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டார். அதில், கடந்த காலங்களில் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதது குறித்து முதலமைச்சர் கூறிய காரணங்கள் அனைத்தும் தற்போதும் தொடர்வதாகவும் டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் காரணமாகவே, நிதி ஆயோக் கூட்டத்தை காரணமாகக் கூறி டெல்லி சென்ற முதலமைச்சர், பிரதமரையும் தனியே சந்தித்துள்ளதாக விஜய் குற்றம் சாட்டி இருந்தார்.

டாஸ்மாக் மீதான அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையையும் வாங்கியது. எனினும், இது நிரந்தரத் தடையல்ல என்பதால், எங்கே பேசினால் விசாரணை தடுத்து நிறுத்தப்படுமோ, அங்கே பேசியாக வேண்டிய சூழ்நிலைக்கு, வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டார். அதற்கேற்றாற்போல அமைந்ததுதான் நீதி ஆயோக் கூட்டம்.
இதையும் படிங்க: பச்சா பாலிடிக்ஸ்.. திமுகவை விமர்சிக்கும் விஜய்யை ஒரே வார்த்தையில் டேமேஜ் ஆக்கிய துரைமுருகன்!!

எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் விடுவதும், ஆளும்கட்சியாக இருக்கும்போது கைகுலுக்குவதும்தான் இந்த கபட நாடக தி.மு.க. தலைமையின் பித்தலாட்ட அரசியல். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், திடீரென இந்த வருடம் மட்டும் செல்ல வேண்டிய அவசியம் என்ன? இது, மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல. தன்னுடைய குடும்ப வாரிசு நிதியைக் காப்பாற்ற மட்டுமே என்பது சாமானிய மக்கள் நன்கு அறிந்ததே.

அமலாக்கத்துறை சோதனை, வழக்குகள் குறித்து பிரதமரிடம் எதுவுமே பேசவில்லை என முதலமைச்சரால் வெளிப்படையாக கூற முடியுமா எனவும், நிதி ஆயோக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மூலம், தி.மு.க.-பா.ஜ.க. இடையேயான மறைமுக கூட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் விஜய் விமர்சித்தார். நிலையில் ராணிப்பேட்டையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன், தி.மு.க.வை விமர்சித்து த.வெ.க. தலைவர் விஜய் கூறிய கருத்துக்கு, "பச்சா இன் பாலிடிக்ஸ்" என்று தனது பாணியில் பதில் அளித்தார்.

இந்த நிலையில் இன்று , சென்னையில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர் பாபு, விஜய்யின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது: “தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள கல்வி நிதியை விடுவிக்கக் கோரி நீதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். மற்ற இயங்களைப் போல சுற்றிவந்து பின்புற வாசல் வழியாக பாஜகவுடன் கள்ள உறவு வைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. நேற்று முளைத்த காளான்களுக்கெல்லாம் இன்று நாங்கள் பதில் சொல்ல தயாராக இல்லை.

களத்துக்கு வரட்டும், அவர்கள் அடிப்பதைவிட 100 மடங்கு வேகமாக ஒரே அடியில் அடிக்க திமுக தயாராக இருக்கின்றது. ஏதோ ஒரு நாள் அறிக்கை, ரோட் ஷோ செல்பவர் அல்ல எங்கள் முதல்வர். நாள்தோறும் மக்களோடு மக்களாக பயணிக்கும் முதல்வருக்கு 2026 இல் மகுடன் சூட்ட தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜக-வின் மற்றொரு வடிவம் தவெக; திமுக-வில் இணைந்த தவெக நிர்வாகி… பகிரங்க குற்றச்சாட்டு!!