திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கடுமையாக கண்டித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் விஜயின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்றும், சர்வாதிகாரத்தின் உச்சத்தை காட்டுவதாகவும் குற்றம்சாட்டினார்.
சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்வது இந்திய ஜனநாயகத்திற்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்று பாரதி தெரிவித்தார். “விஜய் ஜனநாயகம் படத்தில் நடித்தாரே தவிர, ஜனநாயகம் என்றால் என்னவென்று அடிப்படைகூட தெரியாதவர்” என்று அவர் கிண்டலடித்தார்.
கைதுக்கான காரணமாகக் கூறப்படும் உதயநிதியின் கருத்து குறித்து விளக்கமளித்த பாரதி, டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் சரியாக வரவில்லை என்று பேசியபோது கூட்டத்தில் யாரோ திரிஷாவைப் பற்றி கேட்டதாகவும், அதற்கு உதயநிதி “திரிஷா வீட்டில் மட்டும் தண்ணீர் வரும்” என்று பதிலளித்ததாகவும் கூறினார். “திரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா? அவர் தனிப்பட்ட முறையில் எதுவும் சொல்லவில்லை. மக்கள் ஆரவாரத்தில் பேசுவது வழக்கம். இதில் என்ன உலகமகா தவறு?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கர்நாடகாவுக்கு தனியாக போகாதீர்கள்! முதலமைச்சர் விஜய்க்கு பொன் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலங்களிலும் இதுபோன்ற விமர்சனங்கள் பலமுறை வந்திருந்தாலும், அவதூறு வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்தக் கைது நடவடிக்கை உதயநிதி ஸ்டாலினை “இளைய கலைஞர்” என்று அழைக்கும் வாய்ப்பை விஜய்க்கு உருவாக்கியுள்ளதாகவும் பாரதி கூறினார்.
“எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்துவிட்டு ஆளில்லா மைதானத்தில் பந்தாட நினைக்கிறார் முதல்வர். சட்டமன்றத்தில் பதில் சொல்ல பயந்தே இந்த நடவடிக்கை” என்று அவர் தாக்கிப் பேசினார். திரிஷாவை மறைமுகமாக அரசியலுக்கு இழுக்கும் முயற்சியா என்ற கேள்விக்கு, “தமிழகத்தில் எந்த அசிங்கம் வேண்டுமானாலும் நடக்கலாம். அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார் ஆர்.எஸ். பாரதி.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!