தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சிகளைக் காண முடிகிறது.
சனி, ஞாயிறு விடுமுறைகளைத் தொடர்ந்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எனத் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக, சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். குறிப்பாக, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே பலர் தென் மாவட்டங்களை நோக்கிப் பயணித்தனர்.
இந்த நிலையில், நான்கு நாட்கள் தொடர் விடுமுறை முடிவடைந்துள்ளதால், மக்கள் மீண்டும் சென்னையை நோக்கித் திரும்பி வருகின்றனர். நேற்று மாலை முதலே தென் மாவட்டங்களிலிருந்து, குறிப்பாகத் திருச்சி, நெல்லை, கோவை, மதுரை, நாகை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மக்கள் ஒரே நேரத்தில் சாலைகள் வழியாகச் சென்னையை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கடலாக மாறிய புழல் ஏரி... கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம்... காலையிலேயே சென்னைக்கு அதிமுக்கிய வார்னிங்...!
இதன் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் எனப் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி வருவதால், திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
நேற்று முதலே செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வேலை நாள் என்பதால், பலரும் சென்னையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சாரை சாரையாக அணிவகுத்து நிற்கும் காட்சிகளைக் காண முடிகிறது. தென் மாவட்டங்களில் இருந்து விரைவாகப் பயணித்து வந்த பொதுமக்கள், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளனர்.
இதனால், சென்னையை நோக்கிச் செல்லும் பொதுமக்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமாகச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதையும் படிங்க: 16 மாவட்டங்களுக்கு குறி வைக்கும் கனமழை... இன்று எங்கெல்லாம் ருத்ரதாண்டவம் ஆடப்போகிறது தெரியுமா?