பரந்தூர் விமான நிலைய திட்டம், சென்னையின் இரண்டாவது பசுமைவெளி விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்பட உள்ள ஒரு முக்கியமான திட்டமாகும். இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக் கழகமான TIDCO (Tamil Nadu Industrial Development Corporation) மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக சுமார் 5,476 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது, இதில் பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 13-20 கிராமங்கள் (எ.கா., ஏகனாபுரம், வளத்தூர், நெல்வாய், மடபுரம்) அடங்கும். இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.29,144 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சென்னை விமான நிலையத்தின் இடநெருக்கடியைத் தீர்க்கவும், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். இதில் இரண்டு இணையான ஓடுபாதைகள், முனையக் கட்டிடங்கள், சரக்கு முனையம் மற்றும் பிற வசதிகள் அடங்கும்.

பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள், விவசாய நிலங்கள், நீர்நிலைகள், மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி 1,019 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் பரந்தூருக்கு பதிலாக, ஏற்கனவே உள்ள சென்னை விமான நிலையத்தை விரிவாக்குவது அல்லது பிற இடங்களை பரிசீலிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இவர்களை அண்மையில் தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு, பரந்தூர் விமான நிலையத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், மக்களுடன் பேரணியாக தலைமைச் செயலகம் வந்து முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவும் தயங்க மாட்டேன் என்றும் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் தடை பின்பற்றப்படுகிறதா..? தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை போட்ட உத்தரவு என்ன..?
இதனிடையே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளன. சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் இலக்கை எட்டும் வரை, பரந்தூர் விமான நிலையம் திறக்கப்பட்டால் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய விமான நிலைய ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது.

இந்த சூழலில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி மொத்தம் 3331.25 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு, ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.57 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையின்படி கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் அளவைப் பொறுத்து இழப்பீடு நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு, பத்திரப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர் மற்றும் அக்கமாபுரம் ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த 19 நில உரிமையாளர்கள் நிலம் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். 17.52 ஏக்கர் நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 9.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நிலம் பதிவு செய்யப்பட்ட நான்கு மணி நேரத்தில், பணம் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. காஞ்சிபுரம் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை.. தமிழக அரசு அனுமதி.. மகிழ்ச்சியில் மனைவி..!