நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மலைப்பாதைகளில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மேட்டுப்பாளையம் – உதகை மற்றும் மேட்டுப்பாளையம் – கோத்தகிரி செல்லும் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் சாலையில் உள்ள பர்லியார் பகுதியில் பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மற்ற இடங்களில் சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையிலும் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த இரு வழித்தடங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குச் செல்லும் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடேங்கப்பா...!! - ஓவர் நைட்டில் 25 செ.மீ. மழை பதிவா?... தமிழகத்தின் முக்கிய மாவட்டத்தில் சம்பவம் செய்த மழை...!
மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் பாதையிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
பர்லியார் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின்போது, அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்து ஒன்று அங்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து பேருந்தின் மீது விழுந்துள்ளது. இதில் பேருந்தின் மேற்கூரைப் பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
அந்தப் பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் என மொத்தம் ஒன்பது பேர் பயணித்துள்ளனர். மரம் விழுந்ததில் பேருந்தின் மேற்கூரைப் பகுதி சேதமடைந்ததால், உள்ளே இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். பின்னர், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடைசியாக நடத்துநரும் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. பேருந்தில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, அந்தப் பகுதியில் சாலையில் விழுந்துள்ள மண், பாறைகள் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஜேசிபி இயந்திரங்கள் வந்ததும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காட்டாறுகளிலும் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் தற்போது 94 அடியை எட்டியுள்ளது.
துண்டிக்கப்பட்டுள்ள இரு சாலைகளிலும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைக்கு அந்த வழித்தடங்களில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING கொட்டித்தீர்க்கும் கனமழை... நீலகிரியில் இந்த 6 வட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை...!