கோயம்புத்தூரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமலையம்பாளையம் பஞ்சாயத்து. இங்குள்ள பத்திமலையில் கும்மிட்டிபதி என்ற குகை வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை மிக்க குகை ஓவியங்கள் இங்கு காணப்படுகின்றன. குறிப்பாக வெள்ளை நிறமிகளைக் கொண்டு இங்கு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது தான் இதன் கூடுதல் சிறப்பு..

பொதுவாக பாறை ஓவியங்கள் கருப்பு நிறத்திலும், பழுப்பு நிறத்திலுமே தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. சித்தன்னவாசல் போன்ற இடங்களில் தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்ட நிறமிகள் மூலம் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் வெள்ளை நிறமிகளைக் கொண்டு வரையப்பட்ட பாறை ஓவியங்கள் சொற்பமே. அத்தகையதொரு சிறப்பு மிக்க இடங்களில் ஒன்றுதான் இந்த கும்மிட்டிப்பதி.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்..

யானை, தேர், மான் போன்ற உருவங்கள் இங்கு வரையப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு சாக்பீஸ் கட்டியால் வரைந்தது போன்று தோன்றுவதால் இதன் பழமையை பலர் உணர்வதில்லை. இதனால் அங்கு வரும் இளைஞர்கள், காதல் ஜோடிகள் அதன்மீது சாக்பீசால் புதிய கோடுகளை வரைந்து விட்டு செல்கின்றனர். எனவே இவற்றை முறைப்படி பாதுகாக்க வேண்டும் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

1966-ம் வருடத்திய இந்திய தொல்லியல் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் சட்டத்தின் பிரிவு 3 மற்றும் உட்பிரிவு 1-ன் படி இனிமுதற்கொண்டு கும்மிட்டிப்பதி பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் இடங்களின் கீழ் வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்மூலம் அந்த ஓவியங்கள் அமைந்துள்ள குகை பகுதி இரும்பு வேலியிடப்பட்டு பாதுகாக்கப்படும். பாறை ஓவியங்கள் குறித்த விளக்கங்கள் விளம்பர பலகைகள் மூலம் அங்கு வைக்கப்படும். எனவே இனி அப்பகுதிக்கு செல்பவர்கள் அவற்றின் தொன்மை மற்றும் சிறப்புகளை அறிந்து கொள்ள வழிவகை ஏற்பட்டுள்ளது. கூடவே அவை அழிவில் இருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை.மாணவி வழக்கில் கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி..