தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. தற்போது நேற்று முதல் அக்னி நட்சத்திரமும் தொடங்கியுள்ளது. இதனால் மாநிலத்தில் பரவலாக வெயில் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர் மாறாகக் கடந்த இரு நாட்களாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான ஒரு வானிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது இரவு 10 மணி வரை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 30- 40 கிமீ காற்று வீசவும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் தான் இப்படி பண்றாங்க.. தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு!!

அதேபோல வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், மதுரை விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் இந்த மாவட்டங்களில் சில இடங்களில் நீர் தேங்கவும் டிராபிக் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருக்கிறது. இது தவிர ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை காரணமாக இன்றைய தினம் மாநிலத்தில் வெப்பம் குறைவாகவே இருந்தது. இன்றைய தினம் வேலூரில் அதிகபட்சமாக 101.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது. இது தவிர மதுரை, தொண்டி ஆகிய இரு இடங்களில் மட்டுமே வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்திருந்தது. அதாவது கனமழையால் வெப்பம் பெரியளவில் குறைந்தே காணப்பட்டது.
இதையும் படிங்க: சுழற்றி அடித்த புழுதிக் காற்று..! திரையரங்கின் மேற்கூரை விழுந்து சேதம்..!