நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பெரும் வெற்றியடைந்திருப்பதைப் பாராட்டியுள்ளார்.ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் பேரன்பையும் பெரும் வரவேற்பையும் பெற்று வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நடிக்கத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும், தனது முதல் திரைப்படத்தில் எத்தகைய ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நடித்தாரோ, அதே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இன்றளவும் ஒவ்வொரு படைப்பிலும் காட்டும் அர்ப்பணிப்புதான் அவரது தொடர் வெற்றிப் பயணத்தின் அடிப்படை என்றும், தலைமுறைகள் கடந்தும் ரசிகர்கள் அவர் மீது கொண்டிருக்கும் ஈர்ப்பின் முதற்காரணம் இதுவே என்றும் சீமான் தெரிவித்தார்.

புகழின் உச்சத்தை அடைந்த பின்னரும், நான்கு தலைமுறை இயக்குநர்களுடன் இணைந்து நடித்த பின்னரும், ஒவ்வொரு திரைப்படத்தையும் புதிய தொடக்கமாகக் கருதி உழைப்பதால்தான் காலங்கள் மாறினாலும், திரைமொழியும் தொழில்நுட்பமும் மாறினாலும், மக்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அன்புப்பிணைப்பு ‘ஜெயிலர் 2’ வெற்றி வரை மேலும் வலுப்பெற்று வருவதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் தோல்வி எதிரொலி..!! அலுவலகத்திற்கு கூட வராத சீமான்.. கலக்கத்தில் தம்பிகள்!!
‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்காக ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், இப்படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார் மற்றும் திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என இப்படைப்பின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார் சீமான்.
இதையும் படிங்க: "அவர விட்டுருங்க"..! ஈழத் தமிழருக்கு தூக்கு..! சவுதி அரேபிய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்..!!