திரைப்படத்துறையைப் பாதிக்கும் வகையில் "ஜனநாயகன்" திரைப்படத்தைச் சட்டவிரோதமாக இணையதளத்தில் கசியவிட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபரின் முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான "ஜனநாயகன்" திரைப்படம், திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே சட்டவிரோதமான முறையில் சில இணையதளங்களில் வெளியானது. இது குறித்துப் படக்குழுவினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த துணிக்கடை மேலாளர் உமா சங்கர் என்பவர், இந்தப் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாகப் பதிவேற்றியது கண்டறியப்பட்டது.
காவல்துறையினர் தன்னை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற அச்சத்தில், உமா சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஜனநாயகன் ரிலீஸ்..? இன்று முடிவை சொல்லும் தணிக்கை வாரியம்..!
இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், சினிமா திருட்டு என்பது ஒரு படைப்பாளியின் உழைப்பைச் சிதைக்கும் செயல் என்றும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. முன்ஜாமீன் மனுத் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உமா சங்கரை எந்த நேரத்திலும் காவல்துறையினர் கைது செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்படங்களைச் சட்டவிரோதமாக வெளியிடுவது பெரும் குற்றம் என்றும், இதில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரையுலகினர் மற்றும் காவல்துறை தரப்பில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!