கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சேத்தனூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கெடிலம் பகுதியில் உள்ள டோன் போஸ்கோ தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி முடிந்து ஒரு இருசக்கர வாகனத்தில் செரத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த +1 படித்து வந்த மாணவர்கள் ஜஸ்டின் (16), மற்றும் அவருடன் புருணோ (17), ஆலன் (15), சுஜித் (16), அஜய் (16) ஆகிய ஐந்து மாணவர்களும் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர் .
மேட்டத்தூர் பிரிவு சாலை அருகில் திரும்பியபோது அந்த வழியாக விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஐந்து பேரில் தலையில் படுகாயம் அடைந்த ஜஸ்டின் (16), புருனோ (17) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆலன், சுஜித், அஜய் ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருநாவலூர் காவல் நிலைய போலீசார் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மலைப்பாதையில் தலைக்குப்புற கவிழ்ந்த வேன்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேரின் நிலை என்ன?
உயிரிழந்த இரண்டு பேரின் சடலத்தை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொதுமக்கள் அடிக்கடி விபத்து நடைபெற்ற இடத்தில் போதிய விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவில்லை எனக் கூறி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் கலைந்து சென்றனர். விபத்தில் இரண்டு பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதிய பைக்... சம்பவ இடத்திலேயே 2 பேர் துடிதுடித்து பலி...!