தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆனந்த நகர் பகுதியில் அமைந்துள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் 12 வயது சிறுமிக்கு மதபோதகர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள ஆனந்த நகர் பகுதியில் போல்பேட்டை சேகரத்திற்கு சொந்தமான சிஎஸ்ஐ தேவாலயத்தில் அருள்ராஜ் என்பவர் மதபோதகராகப் பணியாற்றி வந்தார். தேவாலயத்திற்கு வந்த 12 வயது சிறுமிக்கு இவர் பாலியல் சீண்டல் மற்றும் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சிறுமி தனது தாயிடம் இந்தச் சம்பவத்தைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அருள்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு உடனடியாக வினையாற்றிய கனிமொழி, “தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் போதகரால் 12 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது” என்று கூறினார். தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எங்கும் பாதுகாப்பில்லை என்ற சூழல் உருவாகியுள்ளதாக அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் வகித்த செயல் தலைவர் பதவி மீண்டும் வேணும்! திமுகவில் உதயநிதி, கனிமொழி தரப்பு போர்க்கொடி!
மேலும், தற்போதைய தவெக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ ஒன்றை உருவாக்கி விளம்பரப்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய கனிமொழி, இதற்கு தனியாக உதவி எண் கூட இல்லாத நிலையை விமர்சித்தார். “சமூகநலத் துறை சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மகளிர் பாதுகாப்புக்கான 181 எண்ணையும், தேசிய அளவில் நீண்ட காலமாக உள்ள 1098 குழந்தைகள் உதவி எண்ணையும் பயன்படுத்துவதற்கு, மக்கள் வரிப்பணத்தில் எதற்கு தனியாக ஒரு ‘சிறப்பு படை’ உருவாக்க வேண்டும்? எந்த ஒரு சிறப்பு அதிகாரமும் இல்லாத ‘சிறப்பு படை’ இருந்து என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!