முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து (வயது 77) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலை 8 மணி அளவில் காலமானார். திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது முதல் மனைவி பத்மாவதியின் மகனான முத்து, தனது தந்தையின் கலைத் துறை செல்வாக்கைப் பின்பற்றி 1970களில் தமிழ்த் திரையுலகில் நடிகராகவும், பின்னணிப் பாடகராகவும் பயணத்தைத் தொடங்கினார்.
‘பிள்ளையோ பிள்ளை’, ‘பூக்காரி’, ‘சமையல்காரன்’, ‘அணையா விளக்கு’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் இவர் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் இணைந்து நடித்த படங்கள் பல வெற்றி பெற்றன. அதுமட்டுமின்றி 2008இல் ‘மாட்டுத்தாவணி’ படத்தில் இசையமைப்பாளர் தேவாவின் இசையில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். எம்ஜிஆருக்கு போட்டியாக திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்ட மு.க.முத்து, எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் அரசியல் மற்றும் திரையுலகில் இருந்து விலகினார்.

தந்தையுடனான மனஸ்தாபம் காரணமாக அரசியலில் இருந்து விலகி, தனித்து வாழ்ந்து வந்த மு.க முத்து, 2015 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: மு.க.முத்து மறைவு.. அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் இரங்கல்..!
இதனைத்தொடர்ந்து மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர். நடிகர் விக்ரமும் மு.க.முத்துவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதுமட்டுமின்றி முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோர் முதலமைச்சரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மு.க.முத்துவின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. கோபாலபுரத்தில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானம் வரை நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையடுத்து மின் மயானத்தில் வைத்து மு.க.முத்து உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மு.க.முத்துவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் மு.க.முத்துவின் உடல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: மு.க.முத்து மறைவு.. அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் இரங்கல்..!