வடசென்னை வளர்ச்சித் திட்டங்கள், தமிழ்நாடு அரசின் முக்கியமான முன்னெடுப்புகளில் ஒன்றாகும். இந்தத் திட்டம் வடசென்னைப் பகுதியை சமநிலையான வளர்ச்சி கொண்ட பகுதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, கொளத்தூர் தொகுதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சட்டமன்றத் தொகுதி என்பதால், இங்கு பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டங்களுக்கு முதலமைச்சர் பலமுறை அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைத்துள்ளார்.வடசென்னை வளர்ச்சித் திட்டம் 2024-இல் தொடங்கப்பட்டது. இதன் கீழ் ஆரம்பத்தில் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பின்னர் இது விரிவாக்கம் செய்யப்பட்டு, 2025-இல் 6,300 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான 252 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் கொளத்தூர் தொகுதியில் அலங்கார மீன் வாணிப மையம், ஏரிகளின் மேம்பாடு, பூங்காக்கள், சமுதாயக் கூடங்கள், பள்ளிக் கட்டடங்கள், மருத்துவமனை விரிவாக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் அடங்கும்.கொளத்தூரில் குறிப்பிடத்தக்க திட்டங்களில் ஒன்று அலங்கார மீன் வாணிப மையம்.

இது வில்லிவாக்கத்தில் 53.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 188 கடைகள், அலுவலகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவை அமையும். இது கொளத்தூரை அலங்கார மீன் வாணிபத்தின் வணிக மையமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், கொளத்தூர் ஏரி, ரெட்டேரி ஏரி, புழல் ஏரி ஆகியவற்றின் கரைகள் வலுப்படுத்தப்பட்டு, நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு அரங்கு, தோட்டம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.2025-ஆம் ஆண்டில் முதலமைச்சர் கொளத்தூர் தொகுதியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்... டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடும் இபிஎஸ்... விளாசிய முதல்வர்...!
இதனிடையே, வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் பெரியார் நகரில் 6 கோடியே 30 லட்சம் ரூபாயில் அமைய உள்ள அமுதம் அங்காடியின் பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், 11 கோடியே 17 லட்சம் ரூபாயில் அமைய உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர்கள், சென்னை மேயர் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். மேலும் கொளத்தூரில் 26 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல் தளத்தில் ஒரே நேரத்தில் 400 பேர் அமரும் உணவு கூடமும் இரண்டாம் தளத்தில் 800 பேர் அமரும் வகையில் திருமணக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தளத்தில் பத்து தங்கும் அறைகள், லிஃப்ட், குளிர்சாதன வசதியுடன் சென்னை மாநகராட்சி சார்பில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: களமாடும் திமுக... ஜன. 24ல் இளைஞரணி அடுத்த மாநாடு...!