தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்றுப் புகழ்மிக்க நகரம், கோயில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பெயர் பெற்றது கும்பகோணம். ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளி, காசிராமன் தெருவில் அமைந்திருந்தது. இந்தப் பள்ளியில் நர்சரி முதல் உயர்நிலைப் பள்ளி வரை சுமார் 900 மாணவர்கள் பயின்று வந்தனர். 2004 ஜூலை 16 அன்று காலை, பள்ளியின் மதிய உணவு சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டது. சமையலறை முதல் மாடியில் அமைந்திருந்தது, மேலும் அங்கு பயன்படுத்தப்பட்ட வைக்கோல் கூரை தீயை வேகமாகப் பரவச் செய்தது.
தீ மளமளவென மேல் மாடிக்கு பரவியது, அங்கு சிறு குழந்தைகள் பயின்று கொண்டிருந்தனர். இந்த விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர், அவர்களில் பெரும்பாலோர் 6 முதல் 10 வயது வரையிலானவர்கள். மேலும், 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த துயரம் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் முழு சமூகத்தையும் ஆழமான சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த துயர சம்பவம் நடந்த 21 ஆண்டுகளாகிவிட்டன. உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக ஆண்டுதோறும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று 21-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் படங்கள் அடங்கிய பேனர் பள்ளியின் முன்பு வைக்கப்பட்டது. பெற்றோர்கள், உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலரும் மலர் தூவி, மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர், குழந்தைகளின் நினைவிடங்களில் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை தீ விபத்து ஏற்பட்ட பள்ளியில் இருந்து தீபம் ஏந்தியவாறு, மவுன ஊர்வலம் புறப்பட்டு, மகாமக குளத்திற்கு சென்று மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரே சாக்கடை தண்ணி.. கொசு தொல்லை.. மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
இதையும் படிங்க: நானும் டெல்டாக்காரன் தான்.. மார்தட்டிய முதல்வர்! தஞ்சைக்கு டாப் 3 அறிவிப்புகள் வெளியீடு..!