வரலாற்றுச் சிறப்புமிக்கத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உதவியாளர் ஒருவர் தனது பிற மத அடையாளங்களுடன் சென்ற விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனது கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்துள்ளதுடன், இனிவரும் காலங்களில் உரிய விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று வழக்கை முடித்து வைத்துள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சுவாமி தரிசனம் செய்ய வந்தபோது, அவருடைய உதவியாளரான இஸ்லாமியர் ஒருவர் தனது மத அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் கோயிலுக்குள் வந்ததாகக் கூறி சர்ச்சை எழுந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் ஆகம விதிகள் மற்றும் மரபுகளை மீறி நடைபெற்ற இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தபோது, கோயிலுக்குள் பிற மதத்தவர் மத அடையாளங்களுடன் உள்ளே சென்ற சம்பவத்திற்கு நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியது. "திருவண்ணாமலை கோயிலில் இஸ்லாமியர் ஒருவர் அவரது மத அடையாளங்களுடன் உள்ளே சென்றுள்ளார்; இதனை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று நீதிபதிகள் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டினர்.
இதையும் படிங்க: அரசு அலுவலகங்களில் எத்தனை சாதிய வன்கொடுமை வழக்குகள்? உயர்நீதிமன்றம் கேள்வி!
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இனிவரும் காலங்களில் கோயில்களுக்குள் பிற மதத்தினர் வரும் சூழல் ஏற்பட்டால், இந்து சமய அறநிலையத்துறையின் சட்ட விதிகளும் ஆகம நடைமுறைகளும் எவ்வித சமரசமுமின்றி மிகக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார். தமிழ்நாடு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட இந்த எழுத்துப்பூர்வ மற்றும் வாய்மொழி உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றக் கிளை, இந்த வழக்கை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!