அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவைத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு குறித்து விளக்கம் அளித்துள்ள அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான இன்பதுரை, உயர்நீதிமன்றம் எங்கள் வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்துவிடவில்லை; இந்த விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவரின் முடிவை எதிர்த்து நாங்கள் கண்டிப்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சியான தவெகவிற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி, அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார். அந்த மனு நிலுவையில் இருந்தபோதே சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த ராஜினாமாக் கடிதங்களைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதனை எதிர்த்து அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் இன்பதுரை, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்துவிடவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட 6 எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக கொறடா சபாநாயகரிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளார். அந்தப் புகார் மனு சபாநாயகரின் பரிசீலனையில் நிலுவையில் இருக்கும் சூழலில், தற்போதைய நிலையில் இதில் நீதிமன்றம் தலையிடாமல் இருப்பதற்கு ஒரு சட்ட விளக்கத்தை மட்டுமே உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ளது என்று தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
மேலும் பேசிய அவர், சட்டமன்ற மரபுகள் மற்றும் முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படி, சபாநாயகரின் ஒருதலைப்பட்சமான அல்லது அரசியல் சாசனத்திற்கு முரணான முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முழு அதிகாரம் உண்டு. தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காகவே எம்.எல்.ஏ-க்கள் அவசரமாக ராஜினாமா செய்துள்ளனர். எனவே, இந்த உத்தரவை எதிர்த்தும், தகுதி நீக்க மனுவின் மீது கால நிர்ணயம் செய்து சபாநாயகர் முடிவெடுக்க உத்தரவிடக் கோரியும் நாங்கள் அடுத்தகட்டமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்; சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம் என்று ஆணித்தரமாகக் கூறினார்.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கு வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை.... சென்னை ஐகோர்ட் அதிரடி!