தமிழகத்தில் சேவல் சண்டை தொடர்பாக காவல்துறை இயக்குநர் ஜெனரல் பிறப்பித்த சுற்றறிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர் கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களின் போது பாரம்பரிய விழாக்களின் ஒரு பகுதியாக சேவல் சண்டை நடத்தப்படுவது வழக்கம் என்றும், ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயங்கள் போல இதையும் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
மேலும் டிஜிபி பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மிருக வதை தடைச் சட்டம் மற்றும் பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் நீதிபதி, தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது என கேள்வி எழுப்பினார். போலீசாருக்கு ஏற்கனவே பல பணிகள் உள்ள நிலையில் சேவல் சண்டை எங்கே நடக்கிறது என கண்காணிப்பது மட்டும் வேலையா எனவும் கருத்து தெரிவித்தார்.இந்நிலையில் டிஜிபி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் சேவல் சண்டைக்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை என்றும், அதை முறைப்படுத்துவதற்காகவே சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சேவல் சண்டைக்கு தடை விதிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம்: சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி!
விலங்கு வதை தவிர்ப்பது, சூதாட்டம் நடக்காமல் பார்த்துக்கொள்வது, கத்திகள் அல்லது கூர்மையான ஆயுதங்களை கட்டி சண்டையிட விடாமல் இருப்பது போன்ற நிபந்தனைகளுடன் நடத்துவதற்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கப்பட்டது. இது பாரம்பரிய நிகழ்வுகளை முற்றிலும் தடை செய்வதற்காக அல்ல, மாறாக சட்டத்திற்கு உட்பட்டு ஒழுங்குமுறையுடன் நடத்துவதற்கான நடவடிக்கை எனவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதா.? அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்.!!