தமிழகத்தில் ஆன்மீக உணர்வுகளைத் தூண்டும் வகையில் மீண்டும் ஒரு கோவில் இடிப்பு சர்ச்சை வெடித்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சியின் தன்னிச்சையான நடவடிக்கைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. கொடுங்கையூரில் உள்ள ஒரு கோவிலை அகற்ற மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ததோடு, அதிகாரிகளின் செயல்பாட்டையும் நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் 34-வது வார்டில் அமைந்துள்ள ஒரு கோவில், சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அதனை 7 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவில் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பதை ஆராயக் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்ற முந்தைய நீதிமன்ற உத்தரவை மாநகராட்சி மதிக்கவில்லை. மேலும், எங்கள் தரப்பு விளக்கத்தைக் கூறவும் அவகாசம் தரவில்லை என வாதிட்டார்.

மாநகராட்சியின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், நீங்கள் அனுப்பியிருப்பது விளக்கம் கேட்கும் 'நோட்டீஸ்' போல இல்லை; ஒரு தீர்ப்பை வழங்கும் 'உத்தரவு' போல இருக்கிறது. இது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 128-க்கு முற்றிலும் முரணானது என சாடினர். உரியக் கால அவகாசம் வழங்காமல் அனுப்பப்பட்ட அந்த நோட்டீஸை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஆக்கிரமிப்பு தொடர்பான ஆய்வறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்கவும், மனுதாரர் தரப்பு பதிலளிக்கத் தகுந்த அவகாசம் வழங்கவும் மாநகராட்சிக்கு ஆணையிட்டனர்.
இதையும் படிங்க: மாடுகளுக்கும் மைக்ரோ சிப்... மார்ச் 18 வரைக்கும் தான் டைம்..! கெடு விதித்த சென்னை மாநகராட்சி...!
ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வழிபாட்டுத் தலங்கள் மீது எடுக்கப்படும் அவசரக்கதி நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்களுக்கு தடை? ஆவின் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் கெடு!