அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தின் போது ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்ததால் ஆத்திரமடைந்த இபிஎஸ், மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாகப் போகிற நிலைமை வரும் என்று பழனிச்சாமி பேசி உள்ளார்.
அது மட்டும் இல்லாமல் அந்த வாகனத்தின் நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எப்போது தனது பிரச்சாரம் நடந்தாலும் அங்கு ஆம்புலன்ஸ் வருவதாகவும் கூறியிருந்தார். ஆளுங்கட்சியை கடுமையாக சாடி பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு திமுக உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு நாவடக்கம் தேவை என்றும் சாடினர். ஒரு எதிர்க்கட்சி தலைவர் அநாகரிகமாக நடந்துகொள்வது ஏற்புடையதா என்றும் கேள்வி எழுப்பினர். எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக கண்டனம் தெரிவித்தது. தோல்வி மேல் தோல்வி கண்டு அரண்டு போயுள்ள பழனிசாமி, சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சென்றாலும் பொதுமக்கள் மட்டுமல்ல அவரது கட்சிக்காரர்களே புறக்கணித்து செல்வதாக விமர்சித்தது. நாளுக்கு நாள் யாருக்கும் மரியாதை தராமல் தரம் தாழ்ந்து பேசிக் கொண்டிருக்கும் பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை என்றும் இல்லையெனில் மக்களே தகுந்த பதிலை தருவார்கள் எனவும் சாடியது.
இதையும் படிங்க: அது FAKE! சீல் கூட இல்ல.. இபிஎஸ்ஐ கண்டித்து வெளியானது போலி அறிக்கை என ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கம் விளக்கம்..!
இந்த நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது. அவசர ஊர்தி தொழிலாளர்கள் சார்பில் மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாக்கை அடக்கி பேசுங்க பழனிச்சாமி.. இல்ல மக்கள் அடக்கிடுவாங்க! திமுக கண்டனம்..!