ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி (37). புழல் அடுத்த பிரிட்டானியா நகர், முதல் தெருவில் வசித்து வந்தவர் இவர் சென்னையில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பால் நிறுவனத்தில் நடந்த ஆடிட்டிங்கில் சுமார் 44.5 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக பால் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள், கடந்த ஜூன் 27ம் தேதி கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்த தொடங்கியதும் நவீன் மனமுடைந்து காணப்பட்டார். மேலும் நவீன் பொலினேனியை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்துவதற்காக, அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது விசாரணைக்கு நாளை வருகிறேன் எனவும், பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றும் கூறி தொடர்பை துண்டித்து விட்டார்.
இந்த சூழலில் கடந்த 9ம் தேதி புழல் காவல் நிலையத்துக்குட்பட்ட பிரிட்டானிய நகர் 1-வது மெயின் ரோட்டில் உள்ள குடிசையில் நவீன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவரது சகோதரி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த புழல் போலீஸார் நவீனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நவீன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரித்தபோது அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தான் வேலை செய்த நிறுவனத்திற்கு இ-மெயில் அனுப்பிய விவரம் கிடைத்தது. அதில் 5 அதிகாரிகளின் மிரட்டலால் இந்த விபரீத முடிவை எடுப்பதாக நவீன் குறிப்பிட்டிருப்பதாக தகவல் உள்ளது. அதன் அடிப்படையிலும், பணம் கையாடலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் புழல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இத்தனை கோடி கையாடலா..!! தூக்கில் தொங்கிய மேலாளர்.. பால் நிறுவனத்தில் நடந்தது என்ன..?
இந்நிலையில் நவீன் அனுப்பிய அந்த இ-மெயிலின் முழு விவரம் கிடைத்துள்ளது. அதில், என்னை சந்தித்த நரேஷ் மற்றும் முகுந்த் ஆகிய இருவரும் மோசடி செய்த பணத்தை திருப்பி கொடுத்தாலும் ஜெயிலில் தான் இருப்பாய் என மிரட்டினர். இதனால் பயந்து நான் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். மேலும் புகார் அளிக்க முடிவு செய்ததால் என்னுடைய எதிர்காலத்தை எண்ணி பயந்து இந்த விபரீத முடிவுக்கு வந்தேன். என்னுடைய தற்கொலைக்கு திருமலா பால் கம்பெனி நிர்வாகமே காரணம். மோசடி குறித்து வெளியே தெரிந்த பிறகு நான் அதை சரி செய்து விடுவதாகக் கூறி முதல் கட்டமாக கடந்த மாதம் 26ம் தேதி 5 கோடி ரூபாய் திருப்பி செலுத்தினேன்.
பின்னர் மூன்று மாதத்தில் மீதி தொகையை செலுத்தி விடுவதாக உறுதி அளித்தேன். இந்த மோசடியில் எனக்கு மட்டுமே தொடர்பு, வேறு யாருக்கும் தொடர்பில்லை. பணம் கைமாறப்பட்ட நான்கு கணக்குகளில் இருந்து மொத்த பணமும் என்னிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த மோசடியில் வேறு யாரும் பயனடையவில்லை.
இந்த மோசடி தொடர்பாக பால் நிறுவன அதிகாரிகள் புகார் ஏதும் அளிக்க வேண்டாம். பால் நிறுவனம் என்னுடைய சொத்து ஆவணங்கள், பாஸ்போர்ட், காசோலைகளை வாங்கி வைத்துள்ளது. பாஸ்போர்ட்டை வாங்கி வைத்ததற்கான அத்தாட்சி கூட கொடுக்கவில்லை. இது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என கூறியபோதும் பால் நிறுவனம் ஏற்றுக்கொள்ளாமல் என்னை சித்ரவதை செய்தது.

எனவே, என்னுடைய சடலத்திலிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இப்போது உங்களால் எதையும் மீட்க முடியாது. (பால் நிறுவன அதிகாரிகள் பெயரை குறிப்பிட்டு) எனது சடலத்தை அலுவலக வாசலில் வைத்து பணத்தை வசூலித்துக் கொள்ளுங்கள். பால் நிறுவனத்தில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. என்னுடைய மரணம் உங்களது ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தை விரைவில் அசைத்துப் பார்க்கும் என நவீன் தெரிவித்திருந்தார். மேலும் அதில், பால் நிறுவன அதிகாரிகள் மற்றும் தனது குடும்பத்தினர் என அனைவரையும் குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டு வருத்தத்தையும் நவீன் பதிவு செய்திருந்தார்.
இந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த நவீனின் கைகள் கட்டப்பட்டு இருந்ததால் இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சோறு போட்ட நாங்க இப்ப பிச்சை எடுக்கிறோம்.. விபரீத முடிவுகளை கையிலெடுக்கும் விவசாயிகள்..!