சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார் என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கில் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் காரில் இருந்த 10 பவுன் நகை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதற்காக தான் அஜித் குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கொலை வழக்காக மாற்றி ஐந்து காவலர்களை சிறையில் அடைத்தனர். சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கூட ஆட்சேபம் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தின. அஜித் குமாரின் உடலில் காயம் இல்லாத இடமே இல்லை என்றும் 44 இடங்களில் காயம் இருப்பதாகவும், மிருகத்தனமான தாக்குதல் என்றும் கூறினர். கொலை செய்பவர் கூட இப்படி தாக்க மாட்டார் என்று தெரிவித்த நீதிபதிகள், இது சாதாரண கொலை அல்ல... அடித்தே கொலை செய்துள்ளார்கள் என்ற குற்றம் சாட்டினர். இதை அடுத்து சிவகங்கை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் நீதி விசாரணை நடைபெறும் என்றும் சிபிசிஐடி சிறப்பு குழு நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி வழக்கை ஒரு எட்டாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: ரொம்ப வருத்தமா இருக்கு! உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்... அரசுப் பணி வழங்குவதாக உறுதி!

இதற்கிடையே நேற்று மாலை அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் செல்போன் மூலம் அஜித் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அவரது சகோதரருக்கு அரசு பணி வழங்குவதாக உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் அமைச்சர் பெரிய கருப்பன் அஜித் குமார் வீட்டிற்கு நேரில் சென்று அவரது சகோதரர் நவீன் குமாருக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கினார். மேலும் மூன்று சென்ட் இடத்திற்கான பட்டாவையும், நவீன் குமாருக்கு காரைக்குடி ஆவினில் டெக்னீசியன் பணிக்கான ஆணையும் வழங்கப்பட்டது. அமைச்சரிடம் இருந்து ஆணையைப் பெற்றுக் கொண்ட அஜித்குமாரின் தாயார் கதறி அழுதது மனம் கலங்கச் செய்தது.

இந்த நிலையில், உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் ஆணைக்கு இணங்க, திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்து மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணையை தொடங்கினார்.
இதையும் படிங்க: கஸ்டடி கொடூர மரணம்.. அஜித் குமார் குடும்பத்திற்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆறுதல்!