திருநெல்வேலி மாவட்டத்தின் தனித்துவமான அடையாளமாக விளங்கும் இருட்டுக்கடை அல்வா, தேசிய அளவில் பெருமை சேர்த்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்கான Food Connoisseurs India Awards விழாவில், “Best Sweet Shop of the Year (South)” என்ற உயரிய விருதைப் பெற்று, தென்னிந்தியாவின் சிறந்த இனிப்பகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் கோலாகலமாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், கடையின் தற்போதைய உரிமையாளர் கவிதா சிங் மேடையேறி விருதைப் பெற்றுக்கொண்டார். நெல்லையின் பாரம்பரியச் சுவையை தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வரும் இந்தக் குடும்பத்தின் நீண்டகால உழைப்பிற்கு இந்த அங்கீகாரம் உரிய பாராட்டாக அமைந்துள்ளது. விருது பெற்ற செய்தி வெளியானவுடன், தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
1900-ஆம் ஆண்டில் கிருஷ்ணா சிங் என்பவரால் தொடங்கப்பட்ட இந்தக் கடை, நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. ஆரம்பத்தில் பகலில் அல்வா தயாரித்து மாலையில் விற்பனை செய்து வந்தது. ஒரே ஒரு சிம்னி விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் மட்டுமே விற்பனை நடந்ததால் ‘இருட்டுக்கடை’ என்ற பெயர் உருவானது. இன்றும் அந்தப் பாரம்பரியம் மாறாமல், மாலை 5 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்கப்படுகிறது. குறைந்த வெளிச்சத்திலேயே விற்பனை தொடர்கிறது.
இதையும் படிங்க: 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை? குழந்தையின் டிஎன்ஏ சோதனையில் அதிர்ச்சி திருப்பம்!

இந்த அல்வாவின் அசாத்திய சுவைக்குத் தாமிரபரணி ஆற்று நீர், கோதுமைப் பாலைப் புளிக்க வைத்துச் செய்யும் முறை, நிறைய நெய், சர்க்கரை ஆகியவை காரணம். மூன்று நாட்கள் நீடிக்கும் உழைப்பு மிகுந்த தயாரிப்பு, செப்புப் பாத்திரத்தில் சமைக்கப்படுவதால் தனித்துவமான மென்மையான சுவை கிடைக்கிறது. வாழை இலையில் பரிமாறப்படும் இந்த அல்வா, தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள ரசிகர்களை ஈர்க்கிறது.
2021-இல் உச்சநீதிமன்றம், ‘இருட்டுக்கடை’ என்ற பெயரை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியத்தை மாற்றாமல், நவீன பேக்கிங் தொழில்நுட்பத்தையும் இணைத்து, பாதுகாப்பான முறையில் விநியோகம் செய்து வரும் இருட்டுக்கடை அல்வா, இப்போது தேசிய அளவில் அங்கீகாரம் பெற்று, திருநெல்வேலி மண்ணின் சுவைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டியுள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் 7 நாட்கள் ரத்து! தென்னக ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!