தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடித் தொடங்குவதை முழுமையாக உறுதி செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது உயர்நீதிமன்றம் இந்த முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி அமர்வு, அங்கு முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதமும் பாடப்பட்டதை நினைவுகூர்ந்தது. எனவே, அரசு நிகழ்ச்சிகளில் மாநிலப் பாடலைப் பாடுவதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதையும் படிங்க: "தமிழ்த்தாய் வாழ்த்து இனி கட்டாயம்!" - பள்ளி, கல்லூரிகளுக்குத் தமிழக அரசு அரசாணை!

மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9 ஆம் தேதி பிறப்பித்த புதிய அறிவிப்பாணையின்படி, வந்தே மாதரமும் தேசிய கீதமும் அடுத்தடுத்து பாடப்பட வேண்டும் என்றும், இதில் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மாநிலப் பாடல் பற்றி அந்த உத்தரவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், மாநிலப் பாடலை இறுதியில் தான் பாட வேண்டும் என எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: "தவெக மாமி அரசே"..! பிஜேபியிடம் அடகு வைத்த அதிகாரம்..! அப்பாவு கடும் தாக்கு.!!